பக்கம் எண் :

886திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


873. பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே. 10

874. ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே. 11

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

10. பொ-ரை: மரப்பட்டையின் சாயம் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தரும் நோன்புகள் பலவற்றை மேற்கொண்டு திரியும் சமணர்களும் மொழியும் அறியாமையோடு கூடிய உரைகளைக் கேளாது ஒழுக்கத்தால் மேம்பட்டவர் வாழும் தில்லையில் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய நடராசப் பெருமானை நாள்தோறும் நாம் தொழுவோம்.

கு-ரை: புறச்சமயிகள் புல்லுரையைக் கேளாது சிற்றம்பல நாதன் திருவடியைத் தினம் தொழுவோம் என்கிறது. பட்டைத் துவர் - மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் காவி. படிமம் - நோன்பு. முட்டைக் கட்டுரை - அறியாமையோடு கூடிய சொல். சிட்டர், ஆசாரசீலர். நட்டம் - நடம்.

11. பொ-ரை: உலகில் உயர்ந்து விளங்கும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், ஒழுக்க சீலர்களாலே புனிதமாகக் கொண்டு போற்றப் பெறும் தில்லைச் சிற்றம்பலத்தே எழுந்தருளிய, சூலப்படையுடைய பெருமான் மீது பாடிய, இத்தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தை. அழகுறப் பாட வல்லவர் நல்லவர் ஆவர்.

கு-ரை: திருஞானசம்பந்தர் திருச்சிற்றம்பலநாதனைப் பற்றிச் சொன்ன தமிழ் மாலையைப் பாடவல்லவர்கள், நல்லவர் ஆவர் என்கின்றது. சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் - ஒழுக்கம் உடையவர்களால் கொள்ளப்படுகின்ற சிற்றம்பலம். கோலத்தால் - அழகால்.