81. சீகாழி
பண்: குறிஞ்சி
பதிக எண்: 81
திருச்சிற்றம்பலம்
875. நல்லார் தீமேவுந் தொழிலார்
நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார்
சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும்
பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந்
நகர்தானே. 1
876. துளிவண் டேன்பாயு மிதழி
தூமத்தந்
தெளிவெண் டிங்கண்மா சுணநீர்
திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை யுகந்தா
னூர்போலுங்
களிவண் டியாழ்செய்யுங் காழிந்
நகர்தானே. 2
____________________________________________________
1. பொ-ரை: நல்லவர்களும், நாள்தோறும்
வேள்விகளைச் செய்பவர்களும், நான்கு வேதங்களை
ஓதுபவர்களும், அன்புடையவர்களும் ஆகிய
அந்தணர்கள், ஒளி பொருந்திய அழகிய தன்
திருவடிகளைப் போற்ற, மேருவில்லால் முப்புரங்களை
அழித்த சிவபெருமான் எழுந்தருளிய தலம், மலை
போன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழி நகராகும்.
கு-ரை: வேதம் ஓதி வேள்விசெய்யும்
அந்தணர்கள் திருவடியைத் தொழ, வில்லால்
புரமெரித்த பெருமானிடம் காழி நகரம் என்கின்றது.
தீ மேவும் தொழிலார் - யாகத்தீயை விரும்பும்
தொழிலையுடைய அந்தணர். நால்வேதம் சொல்லார் -
நான்கு வேதங்களாகிய சொல்லையுடையவர்கள்.
கல்லார் மதில் - மலையையொத்த மதில்.
2. பொ-ரை: வளமான தேன்துளிபாயும்
கொன்றை மலர், தூய ஊமத்தம் மலர், தெளிந்த
வெண்மையான பிறை மதி, பாம்பு, கங்கை ஆகியன
விளங்கும் சென்னிக்கண், ஒளி பொருந்திய
வெள்ளிய தலை மாலையை விரும்பிச் சூடிய சிவபிரானது
ஊர், கள்ளுண்டு களித்த வண்டுகள், யாழ்போல
ஒலிக்கும், சீகாழி நகராகும்.
கு-ரை: கொன்றை, பிறை, பாம்பு,
ஊமத்தம் இவற்றை விரும்பிய இறைவனிடம் இது
என்கின்றது. வண் தேன் துளி பாயும் இதழி என மாறுக.
இதழி - கொன்றை. மாசுணம் - பாம்பு.
|