பக்கம் எண் :

888திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


877. ஆலக் கோலத்தி னஞ்சுண் டமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந் தளித்தான் றன்மையாற்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தாற்
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே. 3

* * * * * * * * 4, 5, 6, 7

878. இரவிற் றிரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பானீ றணிவோர்க்குங்
கரவிற் றடக்கையார் காழிந் நகர்தானே. 8

____________________________________________________

3. பொ-ரை: பாற்கடலில் தோன்றிய ஆலகாலம் எனப்படும் அழகிய நஞ்சினை உண்டு, அமுதம் முழுவதையும் தேவர்களுக்கு ஈந்தருளிய தன்மையை உடையவனாய் மார்க்கண்டேயன் பொருட்டுத் தன் பாதத்தால் காலனை உதைத்த சிவபிரானது ஊர், சீகாழி நகராகும்.

கு-ரை: ஆலகால விஷத்தை உண்டு அமுதத்தைத் தேவர்க்கு அளித்தவனும், காலனைக் காய்ந்தவனும் ஆகிய காவலன் ஊர், காழி என்கின்றது. ஆலக்கோலத்தின் நஞ்சு - ஆலகாலவிஷம். சால - மிக. பாலற்கு - மார்க்கண்டேயற்கு. பரிந்து - கருணை கூர்ந்து. அளித்தான் - உயிர் கொடுத்தான்.

4, 5, 6, 7. * * * * * * *

8. பொ-ரை: இரவில் திரியும் நிசாசரராகிய அசுரர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் இருபது தோள்களையும் நெரித்து, பின் அவன் வருந்திய அளவில் கைகளில் ஏந்தும் வாள் வழங்கிய சிவபிரானது இடம், இறைவனைப் பரவித் திரியும் அடியவர்கட்கும், பால் போன்ற திருநீற்றை அணிபவர்கட்கும், ஒளியாமல் வழங்கும் நீண்ட கைகளையுடைய, வள்ளன்மை மிக்க அடியார் வாழும், சீகாழிப் பதியாகும்.

கு-ரை: இராவணற்கு வாள் அருளிச் செய்தவன் இடம் காழி நகரம் என்கின்றது. இரவில் திரிவோர் - அசுரர்கள்; நிசாசரர் என்பதன் மொழிபெயர்ப்பு. நிரவி - ஒழுங்குபடுத்தி. கரவாள் - கைவாள். கரவு இல் தடக்கையார் - ஒளியாமல் வழங்கும் கையையுடையவர்.