879. மாலும் பிரமனு மறியா
மாட்சியான்
றோலும் புரிநூலுந் துதைந்த
வரைமார்பன்
ஏலும் பதிபோலு மிரந்தோர்க்
கெந்நாளுங்
காலம் பகராதார் காழிந்
நகர்தானே. 9
880. தங்கை யிடவுண்பார் தாழ்சீ
வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித்
தொழுமின்கள்
மங்கை யொருபாக மகிழ்ந்தான்
மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந்
நகர்தானே. 10
____________________________________________________
9. பொ-ரை: திருமால், பிரமன்
ஆகியோர் அறிய முடியாத மாட்சிமையை
உடையவனும்,மான்தோலும், முப்புரி நூலும் பொருந்திய
மலை போன்ற மார்பினனும் ஆகிய சிவபிரான்
எழுந்தருளும் பதி, தம்பால் இரந்தவர்களுக்கு
எந்நாளும் பிறிதொரு நாளையோ, நேரத்தையோ
குறிக்காது உடனே பொருள் வழங்கும் செல்வர்கள்
வாழ்கின்ற சீகாழி நகராகும்.
கு-ரை: அயனும் மாலும் அறியாதவனும்,
பூணூல் அணிந்தவனுமாகிய இறைவன் பதி காழிநகர்
என்கின்றது.
இரந்தோர்க்கு எந்நாளும் காலம்
பகராதார் - யாசிப்பவர்களுக்கு எப்பொழுதும்
இதுகாலமல்ல, இதுகாலமல்ல, என்று சொல்லாது
எப்பொழுதும் கொடுப்பவர்கள்.
10. பொ-ரை: உணவளிப்போர்
தங்கள் கைகளிலே தர, அதனை வாங்கி உண்ணும்
சமணர்களும் தாழ்ந்த சீவரம் என்னும் கல்லாடையை
உடுத்திய புத்தர்களும் ஆகியவர்களின்
தீயொழுக்கத்தை மனத்துக் கொள்ளாமல்,
உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்து ஏற்றவனும்,
மலரணிந்த சென்னியில் கங்கையைத்
தரித்தவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளிய காழி
நகரைப் பேணித் தொழுவீர்களாக.
கு-ரை: புத்தர் சமணர்களுடைய
தீயொழுக்கத்தைச் சிந்தியாமல் காழிநகரைத்
தொழுமின்கள் என்கின்றது.
தம்கையிட உண்பார் - கையில்
பிச்சையிட ஏற்று உண்பவர்கள். சீவரத்தார்கள் -
காவியாடை உடுத்தியவர்கள். பெங்கை -
தீயொழுக்கம்.
|