பக்கம் எண் :

 82. திருவீழிமிழலை891


82. திருவீழிமிழலை

பதிக வரலாறு:

திரும்பாம்புரம் என்னும் தலத்தை வணங்கிக் கொண்டு பிள்ளையார் திருவீழிமிழலைக்கு அப்பருடன் எழுந்தருள அந்தணர்கள் எதிர் கொண்டழைத்தார்கள். பிள்ளையார் சிவிகையினின்றிழிந்து அந்தணர்கள் புடைசூழ விண்ணிழிந்த கோயிலை வலங்கொண்டார். வியந்தார். கீழேவிழுந்து வணங்கினார். உள்ளத்தில் உணர்ச்சி பொங்கி வழிந்தது. இசை ஆயிற்று. "இரும்பொன் மலைவில்லா" என்றெடுத்துச் சந்த இசைத் தமிழைச் சாற்றி மணவாளப் பெருமானது திருவடிக்கீழ் ஆனந்த வெள்ளத்தாடினார்.

பண்: குறிஞ்சி

பதிக எண்: 82

திருச்சிற்றம்பலம்

882. இரும்பொன் மலைவில்லா வெரியம் பாநாணில்
திரிந்த புரமூன்றுஞ் செற்றா னுறைகோயில்
தெரிந்த வடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே. 1

____________________________________________________

1. பொ-ரை: பெரிய பொன்மயமான மேருமலையை வில்லாக வளைத்து, அனலை அம்பாக அவ்வில் நாணில் பூட்டி வானில் திரிந்து கொண்டிருந்த முப்புரங்களையும் அழித்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், கற்றுணர்ந்த அடியவர்கள் செல்லும் திசைகளில் எல்லாம் விரும்பி அவர்களை எதிர்கொள்ளும் மக்கள் வாழும் திருவீழிமிழலை ஆகும்.

கு-ரை: மேருமலையை வில்லாகவும், அங்கியை அம்பாகவும் கொண்டு திரிபுரமெரித்த சிவன் உறையுங்கோயில் திருவீழிமிழலை என்கின்றது. தெரிந்த அடியார்கள் சென்ற திசை தோறும் விரும்பி எதிர்கொள்வார் என்றது, ஞானசம்பந்தப்பெருமான் எழுந்தருளிய போது எதிர்கொண்டதைத் திருவுள்ளத்து எண்ணி எழுந்த உரைபோலும்.