பக்கம் எண் :

892திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


883. வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
ஓதக் கடனஞ்சை யுண்டா னுறைகோயில்
கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும்
வேதத் தொலியோவா வீழி மிழலையே. 2

884. பயிலும் மறையாளன் றலையிற் பலிகொண்டு
துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே. 3

____________________________________________________

2. பொ-ரை: துன்புறும் தேவர்களின் துயர்தீர, வெள்ள நீரொடு கூடிய கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்ட சிவபிரான் உறையும் கோயில், இசையமைப்போடு கூடியதும் சுருதி என்பதற்கேற்ப ஒருவர் ஓதக்கேட்டு ஓதப்பட்டு வருவதும் ஆகிய வேத பாராயணத்தின் ஒலி நீங்காமல் ஒலிக்கின்ற திருவீழிமிழலை ஆகும்.

கு-ரை: துன்புறுகின்ற தேவர்கள் துயர் தீர நஞ்சுண்டநாதன் கோயில் வீழிமிழலை என்கின்றது.

வாதை - துன்பம். கேள்விக் கிடை - வேதத்தை ஓதும் மாணவர் கூட்டம்.

3. பொ-ரை: வேதங்களை ஓதிய பிரமனின், தலையோட்டில் பலியேற்று அனைவரும் துயிலும் நள்ளிரவில் ஆடும் ஒளிவடிவினனாகிய சிவபிரான் உறையும் கோயில், மயில், மடப்பம் பொருந்திய மான், மதி, இள மூங்கில், வெயில் ஆகியனவற்றைப் போன்று கண்ணுக்கு இனிய மென்மையும், மருளும் விழி, முகம், தோள்கள், உடல்ஒளி இவற்றால் பொலியும் மகளிர் வாழும் திருவீழிமிழலையாகும்.

கு-ரை: பிரமகபாலத்தில் பிச்சை ஏற்று, எல்லாம் துயிலும் நள்ளிரவில் நட்டமாடும் பெருமான் கோயில் வீழிமிழலை என்கின்றது.

இந்நகரத்து மாதர் மயிலையும் மானையும் மதியையும் மூங்கிலையும் வெயிலையும் போல் விளங்குகின்றார்கள். சாயலால் மயிர், பார்வையால் மான், நுதலழகால் மதி, தோளால் மூங்கில், கற்பால் வெயில் எனக் கொள்க.