919. மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித்
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியா னமையாள்வா னல்ல நகரானே. 5
920. வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈசன் னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
நாசன் னமையாள்வா னல்ல நகரானே. 6
___________________________________________________
கு-ரை: உமையொருபாகன் இவன் என்கின்றது.
மிளிரும் - விளங்குகின்ற. தளிரும்திகழ் மேனி - தளிரைப்போல்
விளங்குகின்ற மேனி. நளிரும் வயல் - குளிர்ந்த வயல்.
5. பொ-ரை: நீல மணி போன்ற
விளங்கிய கண்டத்தினை உடையவனும், மலர்கள் நிறைந்த
வளைத்துக் கட்டப்பட்ட நீண்ட சடைமுடியினனும், எமக்குத்
தந்தையானவனும் ஆகிய பெருமான் மனத்துணிவோடு மலர்
கொண்டு தன் திருவடிகளை விரும்பித் தொழுதேத்தவும்
நம்மை ஆட்கொண்டருளவும் நண்ணிய நிலையினனாய் நல்லம்
நகரில் எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: மலர்கொண்டு கழல்பேணி, தொண்டர்கள்
தொழுது ஏத்த அவர்களுக்கு அண்மையில் இருப்பவன்
இவன் என்கின்றது. மணி - நீலமணி. பிணிவார் சடை -
கட்டிய நீண்ட சடை. நணியான் - நணுகியவன். துணிவார்
தொண்டர் - மனத்துணிவினை உடைய தொண்டர்.
6. பொ-ரை: மணம் கமழ்கின்ற மலர்களைச்
சூடிய மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடும்,
பூசத்தக்கதாய்ச் சுட்டெடுத்த திருநீறு அணிந்தவனாய்,
இதழ் விரிந்த கொன்றை மாலையைப் புனைந்தவனாய்,
ஈசன் எனத் தன்னை நினைந்தேத்துபவர்களின் வினைகளைப்
பொடி செய்பவனாய், விளங்கும் இறைவன், நம்மை ஆட்கொண்டருள
நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: உமாதேவியோடு நீறணிந்து
கொன்றை சூடிய ஈசன் எனத் தியானிப்பார்க்கு வினைநாசம்
செய்பவன் இவன் என்கின்றது. உள்கி - நினைத்து.
|