பக்கம் எண் :

 87. திருவடுகூர்923


941. துணியா ருடையாடைதுன்னி யரைதன்மேல்
தணியா வழனாகந் தரியா வகைவைத்தார்
பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த
அணியார் வடுகூரி லாடும் மடிகளே. 5

942. தளருங் கொடியன்னா டன்னோ டுடனாகிக்
கிளரு மரவார்த்துக் கிளரு முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
ஒளிரும் வடுகூரி லாடும் மடிகளே. 6

____________________________________________________

காவலோடுகூடிய முப்புரங்கள். மணிகவரும் கொல்லை கடிய முலை நல்லார் பவரும் - இரத்தினங்களைக் கவரும் முல்லைநிலத்தில் உள்ள காவல் பொருந்திய முலையோடு கூடிய பெண்களாகிய கொடிகளோடு கூடிய.

5. பொ-ரை: துணிக்கப் பெற்றதாகிய கோவண ஆடையை இடையிலே தரித்து அதன்மேல் தீப்போன்ற விட வெம்மை தணியாத நாகத்தை அழகுறத் தரித்தவராகிய அடிகள் அடியவர் பலரும் பணிந்து பரவி வாழ்த்த அழகிய வடுகூரில் ஆடியருள்கின்றார்.

கு-ரை: கோவணமுடுத்து அதன்மேல் அழகாக நாகம் வைத்தவர், அடியார்கள் பலரும் வணங்கும் வடுகூரில் ஆடும் அடிகள் என்கின்றது. துணி - கிழிக்கப்பெற்ற கோவணம். துன்னி - பொருந்தி. தணியா அழல் நாகம் - தணியாத கோபத்தோடு கூடிய பாம்பு. பணி ஆர் அடியார்கள் - பணிதலைப் பொருந்திய அடியார்கள்.

6. பொ-ரை: சுமை பொறுக்காது தள்ளாடும் கொடி போன்றவளாகிய உமையம்மையோடு கூடி, விளங்கும் பாம்பினை இடையிலே கட்டிக்கொண்டு விளக்கம் பொருந்திய முடிமேல் வளரும் பிறைமதி ஒன்றைச் சூடி, வரிகள் பொருந்திய வண்டுகள் இசைபாட பலராலும் நன்கறியப்பட்ட வடுகூரில் அடிகளாகிய பெருமான் ஆடியருள்கின்றார்.

கு-ரை: உமாதேவியோடு உடனாகி, அரவு பிறை இவற்றை அணிந்து வடுகூர் அடிகள் ஆடுவர் என்கின்றது. தளரும் கொடி அன்னாள் - சுமை பொறுக்காது தள்ளாடும் கொடியை ஒத்த உமாதேவி. அரவு - பாம்பு. கிளரும் - விளங்கும். ஒளிரும் - பிரகாசிக்கும்.