பக்கம் எண் :

936திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


967. புத்த ரருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
நித்த னெருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்த னறவன்றன் னடியே யடைவோமே. 10

968. ஏரா ரெருக்கத்தம் புலியூ ருறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
ஆரா வருந்தமிழ் மாலையிவை வல்லார்
பாரா ரவரேத்தப் பதிவா னுறைவாரே. 11

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

10. பொ-ரை: புத்தர் சமணர் ஆகியோர்தம் பொய்யுரைகளை விலக்கித் தூய்மையைத் தழுவி விளங்கும் ஒளி வடிவினனாய், உமையம்மையாருடன் நித்தம் மணாளனாக விளங்குவோனாய், எருக்கத்தம்புலியூரில் விளங்கிக் கொண்டிருக்கும் அறவடிவினனாகிய தலைவன் அடிகளை, நாம் அடைவோம்.

கு-ரை: சுத்தி தரித்து - தூய்மையைப் பொருந்தி. அத்தன் - தலைவன்.

11. பொ-ரை: அழகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் இறைவனை, சீர்மிகு காழிப்பதியில் தோன்றிய திருவார் சம்பந்தன் அருளிய சுவை குன்றாத அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதுபவர்கள் உலகவர் ஏத்த வானகம் எய்துவர்.

கு-ரை: ஏர் - எழுச்சி. ஆரா அருந்தமிழ் - உணர்ந்தது போதும் என்றமையாத மிக இனிய தமிழ்.

திருஞானசம்பந்தர் புராணம்

ஐயர் நீர்அவ தரித்திடஇப்பதி அளவில்மா தவம்முன்பு
செய்த வாறெனச் சிறப்புரைத் தருளிஅச் செழும்பதி இடம்கொண்ட
மைகொள்கண்டர்தங் கோயிலினுட்புக்கு வலங்கொண்டுவணங்கிப்பார்
உய்யவந்தவர் செழுந்தமிழ்ப்பதிகம்அங் கிசையுடன் உரைசெய்தார்.

- சேக்கிழார்.