90. திருப்பிரமபுரம்
பதிக வரலாறு:
இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருபெயர்களைக்
குறிப்பிட்டு அருளிச் செய்யப்பட்டுள்ளது.
திருவிருக்குக்குறள்
பண்: குறிஞ்சி
பதிக எண்: 90
திருச்சிற்றம்பலம்
969. அரனை யுள்குவீர், பிரம னூருளெம்
பரனையே மனம், பரவி யுய்ம்மினே. 1
970. காண வுள்குவீர், வேணு நற்புரத்
தாணு வின்கழல், பேணி யுய்ம்மினே. 2
971. நாத னென்பிர்காள், காத லொண்புகல்
ஆதி பாதமே, ஓதியுய்ம்மினே. 3
_________________________________________________
1. பொ-ரை: சிவபிரானைச் சிந்தித்துப்
போற்ற விரும்பும் அன்பர்களே, பிரமனூரில்
விளங்கும் பரனையே மனத்தால் பரவிப் போற்றி உய்வீர்களாக.
கு-ரை: சிவபெருமானைச் சிந்திப்பவர்களே,
பிரமபுரத்தில் உள்ள பரமனைப் பரவி உய்யுங்கள்
என்கின்றது.
2. பொ-ரை: சிவபிரானைக் கண்டு தொழ
எண்ணும் அன்பர்களே, வேணுபுரத்தில் விளங்கும் தாணுவின்
திருவடிகளைப் பேணி உய்வீர்களாக.
கு-ரை: காண உள்குவீர் - தரிசிக்க எண்ணுபவர்களே.
வேணுபுரம் - சீகாழி. தாணு - சிவபெருமான்.
3. பொ-ரை: சிவபெருமானை எம் தலைவன்
எனக் கூறும் அன்பர்களே! அன்போடு ஒளி விளங்கும்
புகலிப் பதியில் விளங்கும் ஆதியின் திருவடிப்
பெருமைகளை ஓதி உய்வீர்களாக.
|