972. அங்க மாதுசேர், பங்க மாயவன்
வெங்குரு மன்னும், எங்க ளீசனே. 4
973. வாணி லாச்சிடைத், தோணி வண்புரத்
தாணி நற்பொனைக், காணு மின்களே. 5
974. பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்
ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே. 6
975. கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்
அரசை நாடொறும், பரவி யுய்ம்மினே. 7
___________________________________________________
கு-ரை: நாதன் என்பிர்காள் - என்
தலைவன் என்பவர்களே. புகல் ஆதி - சீகாழியிலுள்ள முதல்வன்.
4. பொ-ரை: அருள் வழங்கும்
குறிப்போடு உமையம்மையைத் தனது திருமேனியின் ஒரு
பாகமாகக் கொண்டுள்ளவன், வெங்குருவில் நிலையாக
உள்ள எங்கள் ஈசன் ஆவான்.
கு-ரை: அங்கம் - மேனி. பங்கம் - பாதி.
வெங்குரு - சீகாழி.
5. பொ-ரை: ஒளி பொருந்திய, பிறைமதி
பொருந்திய சடைமுடி உடையவனாய்த் தோணிபுரத்தில்
விளங்கும் ஆணிப் பொன் போன்ற இறைவனைக் கண்டு தொழுவீர்களாக.
கு-ரை: வாள்நிலாச் சடை - ஒளிபொருந்திய
நிலாவை யணிந்த சடை. ஆணிநற் பொனை - மாற்றுயர்ந்த
பொன்போன்றவனை தோணிபுரம் - சீகாழி.
6. பொ-ரை: பாம்பு பொருந்தி
சடைமுடியோடு பூந்தராயில் விளங்கும் பெருமானை, ஏந்திய
தனபாரங்களை உடைய உமையம்மையின் கணவன் என்று
கூறுவார்கள்.
கு-ரை: பாந்தள் - பாம்பு. பூந்தராய் -
சீகாழி.
7. பொ-ரை: கருமை பொருந்திய கண்டத்தை
உடையவனாய்ச், சிரபுரத்துள் எழுந்தருளிய அரசனை நாள்தோறும்
பரவி உய்வீர்களாக.
கு-ரை: சிரபுரம் - சீகாழி.
|