976. நறவ மார்பொழிற், புறவ நற்பதி
இறைவ னாமமே, மறவ னெஞ்சமே. 8
977. தென்றி லரக்கனைக், குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா, நின்று நினைமினே. 9
978. அயனு மாலுமாய், முயலுங் காழியான்
பெயல்வை யெய்திநின், றியலு முள்ளமே. 10
979. தேர ரமணரைச், சேர்வில் கொச்சைமன்
நேரில் கழனினைந், தோரு முள்ளமே. 11
__________________________________________________
8. பொ-ரை: தேன் பொருந்திய சோலைகளை
உடைய புறவமாகிய நல்ல ஊரில் எழுந்தருளிய இறைவன் திருநாமங்களை,
நெஞ்சமே! நீ மறவாதே.
கு-ரை: நறவம் - தேன். புறவநற்பதி -
சீகாழி. மறவல் நெஞ்சமே எனப் பிரிக்க.
9. பொ-ரை: தென் திசையிலுள்ள இலங்கை
மன்னனாம் இராவணனாகிய அரக்கனைச் சண்பை மன்னனாகிய
சிவபிரான் கயிலை மலையிடைப்படுத்து அன்று நெரித்த
வரலாற்றை நின்று நினைத்துப் போற்றுவீர்களாக.
கு-ரை: தென்றில் அரக்கன் - தென்திசையில்
உள்ள அரக்கன். குன்றில் - கயிலைமலையில். சண்பை -
சீகாழி. அன்று - கயிலையைத் தூக்கிய காலத்து. நெரித்தவா
- இராவணனை நெரித்தவாற்றை.
10. பொ-ரை: பிரமனும் திருமாலும் அடிமுடி
தேடி முயலும் பரம்பொருளாகிய சீகாழிப் பதியில்
விளங்கும் இறைவனது கருணைப் பொழிவைச் சார்ந்து நின்று
நினைக்கும் என் உள்ளம்.
கு-ரை: முயலும் - தேடமுயற்சி செய்யும்.
காழி - சீகாழி.
11. பொ-ரை: புத்தர் சமணர் ஆகியோரை
அணுகாத, கொச்சை வயத்து மன்னனாகிய சிவபிரானின்
ஒப்பற்ற திருவடிகளை நினைந்து தியானிக்கும் என் உள்ளம்.
கு-ரை: கொச்சை - சீகாழி. நேரில்
கழல் - ஒப்பற்ற திருவடி.
|