95. திருவிடைமருதூர்
பதிக வரலாறு:
32-ஆம் பதிகம் பார்க்க.
திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
பதிக எண்:95
திருச்சிற்றம்பலம்
1025. தோடொர் காதினன், பாடு மறையினன்
காடு பேணிநின், றாடு மருதனே. 1
1026. கருதார் புரமெய்வர், எருதே யினிதூர்வர்
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே. 2
1027. எண்ணு மடியார்கள், அண்ணன் மருதரைப்
பண்ணின்மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே. 3
___________________________________________________
1. பொ-ரை: திருவிடைமருதூர் இறைவன் தோட்டை,
இடத் திருச்செவியில் அணிந்தவனாய் நான்கு வேதங்களைப்
பாடுபவனாய், சுடுகாட்டை விரும்பி அதன்கண் நின்று
ஆடுகின்றவனாவான்.
கு-ரை: பேணி - விரும்பி.
2. பொ-ரை: தம்மைக் கருதாதவராகிய
அசுரர்களின் முப்புரங்களை எய்து அழித்தவரும்,
எருதை வாகனமாகக் கொண்டு இனிதாக ஊர்பவரும் ஆகிய
இறைவர்க்குத் திருவிடை மருதூரே விரும்பி உறையும்
இடமாகும். அவரைத் தொழுதால் புகழ் சேரும். வினைகள்
தீர்தலை உடையனவாகும்.
கு-ரை: கருதார் - பகைவர். விருது ஆம் -
பெருமை உளதாம். வினை தீர்ப்பு ஆம் - வினைகள் தீர்தலை
உடையனவாம்.
3. பொ-ரை: மனத்தால் எண்ணி வழிபடும்
அன்பர்கள் தலைமையாளராய் விளங்கும் மருதவாணரைப்
பண்ணிசையோடு அவர்தம் புகழைப் போற்ற, விண்ணுலகமும்
அவர்கள் வசமாகும்.
|