1028. விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே. 4
1029. பந்த விடையேறும், எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர், புந்தி நல்லரே. 5
1030. கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார்
மருதரைத்
தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே. 6
1031. பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை
நிறையால் நினைபவர், குறையா ரின்பமே. 7
____________________________________________________
கு-ரை: அண்ணல் - பெருமையிற் சிறந்தவர்.
பண்ணின் மொழி - தோத்திரங்கள்.
4. பொ-ரை: விரிந்த சடைமுடியை
உடையவரும், எரிபோன்ற சிவந்த மேனியருமாகிய
மருதவாணரைத் தாமதியாது துதிப்பவர் உலகில் பெரியவர்
எனப் போற்றப்படுவர்.
கு-ரை: எரி - மழு. தரியாது - தாமதியாது.
5. பொ-ரை: கட்டுத்தறியில் கட்டத்தக்க
விடையை ஊர்ந்து வரும் எந்தையாராகிய மருதவாணரை
மனத்தால் தியானிப்பவர்கள் அறிவால் மேம்பட்டவராவர்.
கு-ரை: பந்தவிடை - கட்டோடு கூடிய
இடபம்.
6. பொ-ரை: ஒரு காலில் கழலும், பிறிதொரு
காலில் சிலம்பும் ஒலிக்கும் உமைபாகராகிய அழகிய
மருதவாணரை விரும்பித் தொழுவதை நியமமாகக் கொண்டவர்க்கு
வருத்துதற்கு உரிய வினைகள் துன்புறுத்தா; அகலும்.
கு-ரை: கழலும் சிலம்பும் ஆர்க்கும் -
ஒருகால் கழலும், ஒருகால் சிலம்பும் ஒலிக்கும்.
உழலும் வினை - வருத்தும் வினைகள்.
7. பொ-ரை: பிறை பொருந்திய
சடைமுடியினை உடைய தலைமையாளரான வேதங்களை அருளிய
மருதவாணரை நிறைந்த மனத்தால் நினைப்பவர்
இன்பம் குறையப் பெறார்.
கு-ரை: நிறையால் - நிறைவோடு.
|