பக்கம் எண் :

 96. திருஅன்னியூர963


1032. எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே. 8

1033. இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
பரவி யேத்துவார், மருவி வாழ்வரே. 9

1034. நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே. 10

1035. கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே. 11

திருச்சிற்றம்பலம்

___________________________________________________

8. பொ-ரை: கயிலை மலையை எடுத்த இராவணனின் தோள்களை நெரித்த மருதவாணருக்குச் சூட்டுவதற்கு மலர் தொடுத்தவர்கள். பிறவிக்குக் காரணமான ஆசையை விடுத்தவர்களாவர்.

கு-ரை: எடுத்தான் - கைலையைத் தூக்கிய இராவணன், வேட்கை - பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம்.

9. பொ-ரை: திருமால் பிரமர் அடிமுடி அறிய முடியாதவாறு எரி உருவமாய் நின்ற மருதவாணரைப் புகழ்ந்து ஏத்தித் துதிப்பவர் எல்லா நலன்களோடும் மருவி வாழும் வாழ்க்கையைப் பெறுவர்.

கு-ரை: இருவர்க்கு - அயனுக்கும் மாலுக்கும். மருவி - எல்லாவற்றொடும் பொருந்தி.

10. பொ-ரை: நின்றுண்ணும் சமணரும், புத்தரும் எக்காலத்தும் இடைமருது இறைவனாகிய சிவபெருமானை மாறுபட்ட உரைகளால் கூறுவதால் அவர் எக்காலத்தும் நல்லனவே கூறார்.

கு-ரை: சமணரும் புத்தரும் என்றைக்கும் மருதப் பெருமானை அன்றிப் பிறவற்றைப் பேசுவதால் நல்லதைச் சொல்லமாட்டார்கள்.

11. பொ-ரை: இறைவன் திருவருளையே கருதும் ஞானசம்பந்தன் மருதவாணரின் திருவடிகளைப் பெரிதும் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதுபவர்க்குத் துன்புறுத்திய வினைகள் போகும்.

கு-ரை: பொருதவினை - இதுவரையில் வருத்திவந்த வினை.