1050. துன்னார்புரமும் பிரமன்சிரமுந்
துணிசெய்து
மின்னார்சடைமே லரவும்மதியும்
விளையாடப்
பன்னாளிடுமின் பலியென்றடைவார்
பதிபோலும்
பொன்னார்புரிநூ லந்தணர்வாழும்
புறவம்மே. 4
1051. தேவாவரனே சரணென்றிமையோர்
திசைதோறுங்
காவாயென்று வந்தடையக்கார்
விடமுண்டு
பாவார்மறையும் பயில்வோருறையும்
பதிபோலும்
பூவார்கோலச் சோலைசுலாவும்
புறவம்மே. 5
__________________________________________________
4. பொ-ரை: பகைவர்களாகிய திரிபுர
அசுரர்களின் முப்புரங்களையும், பிரமனின்
தலைகளில் ஒன்றையும் அழித்து, மின்னல் போல் ஒளி
விடும் சடைமுடி மேல் பாம்பும் மதியும் பகை நீங்கி
விளையாடுமாறு சூடிப் பல நாள்களும் சென்று
பலியிடுமின் என்று கூறித் திரிவானாகிய
சிவபிரானது பதி, பொன்னாலியன்ற முப்புரி நூலை
அணிந்த அந்தணர்கள் வாழும் புறவமாகும்.
கு-ரை: திரிபுரத்தையும் பிரமன்
சிரத்தையும் அழித்து, சடைமேல் பாம்பும் மதியும்
விளையாட, பலியிடுங்கள் என்று வருவார் பதிபுறவம்
என்கின்றது. பொன் ஆர் புரிநூல் - பொன்னாலாகிய
பூநூல்.
5. பொ-ரை: பாற்கடலைக் கடைந்தபோது
எழுந்த விடத்தின் கொடுமை தாங்காது, தேவர்கள்
திசைதோறும சூழ்ந்து நின்று ‘தேவனே! அரனே! உனக்கு
அடைக்கலம் எங்களைக் காவாய்‘ எனச் சரண் அடைய,
அக்கடலில் தோன்றிய கரிய விடத்தை உண்டு,
பாடல்களாக அமைந்த வேதங்களைப் பயிலும்
சிவபெருமான் வாழும் பதி, மலர்கள் நிறைந்த அழகிய
சோலைகள் சூழ்ந்த புறவம் என்னும் பதியாகும்.
|