கல்வெட்டுவரையில்
பதின்மூன்றுக்கு மேற்பட்ட அரசர் பெருமக்களுடையனவாகக்
காணப்படுகின்றன.
இக்கல்வெட்டுக்களால்,
இத்தலம் இராஜராஜவளநாட்டுத் திருக்கழுமலநாட்டுப்
பிரமதேயம் திருக்கழுமலம் என்று பிரிவும் பெயரும்
குறிக்கப்பெறுகின்றது. பிரமபுரீசுவரர் திருக்கழுமலமுடையார்,
திருக்கழுமலமுடைய நாயனார் என்றும், தோணியப்பரும்
அம்மையும் திருத்தோணிபுரமுடையார், பெரிய நாச்சியார்
என்றும், சம்பந்தப் பெருமான் ஆளுடையபிள்ளையார்
என்றும் குறிக்கப்பெறுகின்றார்கள்.
ஆளுடையபிள்ளையார்
கோயிலில் ஆளுடையபிள்ளையார் வடிவத்தை எழுந்தருளச்
செய்தவள் மூன்றாங்குலோத்துங்கனுடைய அடுக்களைப்
பெண்டுகளிலே மூத்தவள் இராஜவிச்சாதரி என்பாள்
என்பது குறிக்கப்பெற்றுள்ளது. இரண்டாம் இராஜராஜனது
கல்வெட்டு, கங்கைகொண்டசோழ புரத்தானொருவன்
ஆளுடையபிள்ளையார் திருக்கோயில் முதற் பிராகாரம்
திருமதில் எடுக்கப் பொன் கொடுத்தான் என்கின்றது.
கல்வெட்டொன்றில் திருநட்டப்பெருமான் ஆளுடைய
பிள்ளையார் என வருவது சுட்டுவிரல் நீட்டிக் கூத்தாடுகின்ற
குழந்தையாகிய ஞானசம்பந்தரைக் குறிப்பதாகலாம்.
பொத்தப்பிச் சோழன் என்பவன் வீரபாண்டியனை வென்று
வெற்றிப்பரிசாக அங்கிருந்து நடராஜப்பெருமானைக்
கொண்டுவந்து சீகாழியில் கொடுத்தான் எனத் தெரிகிறது.
இங்கு, பொன்கொடுத்தும், நிலம்விட்டும்
போற்றிய அரசர்கள் வீரராஜேந்திரன், குலோத்துங்கன்
II, இராஜராஜன் II. இராஜாதிராஜன் II. குலோத்துங்கன்
III, இராஜராஜன் III, கோப்பெருஞ்சிங்கன் III, வீரவிருப்பணமுடையான்,
வேங்கட தேவராயர், இராமப்பநாயக்கன், ஆறனூர்
இணைச்சியப்ப அகரவல்லவன், விட்டலதேவன் முதலியோராவர்.
இத்தலம் தருமை
ஆதீனத்தின் அருளாட்சியில் உள்ள திருக்கோயில்களில்
ஒன்றாகும்.
2. திருப்புகலூர்
தலம்:
சோழவள நாட்டில்
காவிரித்தென்கரையில் அமைந்துள்ள 75ஆவது தலம். நாகை
மாவட்டத்தில் நன்னிலம் கோட்டத்தைச் சேர்ந்தது.
|