பக்கம் எண் :

1013

2551.







கரவலாளர் தம்மனைக்
     கடைகடோறுங் கானிமிர்த்
திரவலாழி நெஞ்சமே
     யினியதெய்த வேண்டிநீ
குரவமேறி வண்டினங்
     குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான்
     வீரட்டானஞ் சேர்துமே.           2
2552.







உள்ளத்தீரே போதுமின்
     னுறுதியாவ தறிதிரேல்
அள்ளற்சேற்றிற் காலிட்டிங்
     கவலத்துள் ளழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தான்
     குழகன்கோவ லூர்தனுள்
வெள்ளந்தாங்கு சடையினான்
     வீரட்டானஞ் சேர்துமே.           3


     2. பொ-ரை: நெஞ்சே! கரப்பவர் இல்லங்கள் தோறும் சென்று
இரவாதே. இனியதை நீ எய்த வேண்டின், வண்டினங்கள் குரா மரங்களில்
ஏறிக் குழலும் யாழும் போல ஒலிசெய்யும் கோவலூரில் மணம் விரவி வீசும்
கொன்றைமாலையை அணிந்த சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம்.

     கு-ரை: கரப்பவர் வீடுகளின் கடைவாயில் தோறும், கால் நிமிர்த்து
(நடந்து) இரப்பதைச் செய்யாதே; நெஞ்சமே! ஆழி நெஞ்சம்-கடலாழத்தினும்
காண்டற்கரிய ஆழமுடைய நெஞ்சமே! நினைப்பென்னும் நெடுங்கிணறு.
இனியதை எய்தவேண்டினால், சிவபெருமான் வீரட்டானத்தைச் சேர்வோம்.

     3. பொ-ரை: நல்ல உள்ளம் உடையவர்களே! உயிருக்கு
உறுதியானதை நீர் அறிய விரும்புவீராயின் நரகத்தில் அழுந்தித்
துயருறாமல், செவி ஏற்கும் பாடல்களைப் பாடுபவனும் குழகனும்
கோவலூரில் கங்கை தங்கிய சடையினனாக விளங்குவோனும் ஆகிய
பெருமான் உறையும் வீரட்டானத்தை அடைவோம். வருக.