பக்கம் எண் :

1022

2565.







சங்குலாவு திங்கள்சூடி
     தன்னையுன்னு வார்மனத்
தங்குலாவி நின்றவெங்க
     ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு
     தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறு
     மந்தணாரூ ரென்பதே.             5
2566.







கள்ளநெஞ்ச வஞ்சகக்
     கருத்தைவிட் டருத்தியோ
டுள்ளமொன்றி யுள்குவா
     ருளத்துளா னுகந்தவூர்
துள்ளிவாளை பாய்வயற்
     சுரும்புலாவு நெய்தல்வாய்
அள்ளல்நாரை யாரல்வாரு
     மந்தணாரு ரென்பதே.             6


     5. பொ-ரை: சங்கு போன்ற வெண்மையான பிறைமதியைத்
தலையில் சூடி, தன்னை நினைப்பவர் மனத்தில் நிறைந்துநிற்கும் எங்கள்
ஆதிதேவன் மன்னிய ஊர், தென்னஞ்சோலைகளையும், வானுலகம் வரை
மணம் வீசும் உயர்ந்த செண்பக மரங்களையும் உடைய திருவாரூர்.

     கு-ரை: சங்கு உலாவு திங்கள்-சங்கினைப்போலும் வெண்டிங்கள்.
சூடி-சூடிய சிவபிரான். எங்கள் ஆதிதேவன் என்று உரைக்கும் உரிமை
ஆசிரியர்க்கு உண்டு.

     6. பொ-ரை: கள்ள நெஞ்சத்தையும் அது காரணமாகச் செய்யும்
வஞ்சகச் செயல்களையும். தீய எண்ணங்களையும் கைவிட்டு, அன்போடு
மனமொன்றி வழிபடும் அடியவர் உள்ளத்தில் விளங்கும் இறைவன் ஊர்,
வாளை மீன்கள் துள்ளிப்பாயும் வயல்களையும், சுரும்புகள் உலாவும்
நெய்தல் மலர்களையும், நாரைகள் ஆரல் மீன்களைக் கவர்ந்து உண்ணும்
சேற்று நிலங்களையும் உடைய ஆரூர்.