பக்கம் எண் :

1041

2593.

மாறு தன்னொடு மண்மிசை யில்லது
     வருபுனன் மாகாளத்
தீறு மாதியு மாகிய சோதியை
     யேறமர் பெருமானை
நாறு பூம்பொழிற் காழியுண் ஞானசம்
     பந்தன தமிழ்மாலை
கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங்
     குற்றங்கள் குறுகாவே.           11

        திருச்சிற்றம்பலம்



     11. பொ-ரை: இவ்வுலகில் தன்னொடு ஒப்புக்கூறத்தக்க தலம்
ஒன்றும் இல்லாத மாகாளத்தில் உறையும் ஆதியும் அந்தமும் இல்லாத
சோதியை, விடை ஏறும் பெருமானை, ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய
தமிழ்மாலையைக் கூறி வழிபடுவோரையும், கேட்போரையும் குற்றங்கள்
குறுகா.

     கு-ரை: மண்மிசை தன்னொடு மாறு இல்லது-இப்பூமியில் தன்னுடன்
ஒப்புக்கூறத் தக்கது வேறு யாதும் இல்லாதது. ஈறும் ஆதியும்-அநாதி
நித்தமுத்த சுத்த சித்துருவாகிய பரசிவம் உயிர்கட்கு அருளற்பொருட்டு
ஆதியும் அந்தமும் ஆகி உபகரித்தல் குறித்தது. ‘ஆதியும் அந்தமும்
ஆயினார்’ (திருவாசகம் 214.) இறைவன் ஏறுவதால் ஏறு எனப்
பெயர்பெற்றது எனல் இதுபோலும் இடங்களில் பொருந்துவதே.

திருஞானசம்பந்தர் புராணம்

அம்பர் மாநகர் அணைந்துமா காளத்தில்
     அண்ணலார் அமர்கின்ற
செம்பொன் மாமதிற் கோயிலை வலங்கொண்டு
     திருமுன்பு பணிந்தேத்தி
வம்பு லாமலர் தூவிமுன் பரவியே
     வண்டமி ழிசைமாலை
உம்பர் வாழநஞ் சுண்டவர் தமைப்பணிந்
     துருகும் அன் பொடுதாழ்ந்தார்.

                              -சேக்கிழார்.