பக்கம் எண் :

1043

2595.







விண்க ளார்தொழும் விளக்கினைத் துளக்கிலா
     விகிர்தனை விழவாரும்
மண்க ளார்துதித் தன்பரா யின்புறும்
     வள்ளலை மருவித்தம்
கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத்
     துறைதரு கற்பகத்தைப்
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர்
     பழியிலர் புகழாமே.                2
2596.







பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது
     புலியத ளழனாகம்
தங்க மங்கையைப் பாகதுடையவர்
     தழல்புரை திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்
     துறைதரு கற்பகத்தை
எங்கு மேத்திநின் றின்புறு மடியரை
     யிடும்பைவந் தடையாவே.           3


     2. பொ-ரை: தேவர்கள் தொழும் திருவிளக்கை, தளர்ச்சியுறாத
விகிர்தனை, விழாக்கள் பலவும் நிகழ்த்தும் மண்ணுலகில் உள்ளார் துதித்து
அன்புடையவர்களாய் மகிழும் வள்ளலை, சென்றடைந்து தம் கண்களாரக்
கண்டு மகிழும் நம் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை, பண்களோடு
பாடல்களைப் பாடிப் போற்றுவார் கேடிலர். பழியிலர். அவரைப்
புகழ்வந்தடையும்.

     கு-ரை: விண்ணோர் தொழும் விளக்கு துளக்கு-தளர்ச்சி. விகிர்தன்-
முரணுறுசெயலினன். திருவிழாக்கள் நிறைந்த மண்ணுலகில் வாழ்வோர்
அன்பராகிய பேரின்பம்பெற ஈந்தருளும் வள்ளல். அவ்வள்ளலைச் சேர்ந்து
கண்ணாரக்கண்டு பண்ணாரப் பாடிப் பணிவார் கேடும் பழியும் இலராவர்,
புகழ் உளராவர். தரிசனமும் கீதமும் திருந்தவும் முற்றவும் செய்தால்
எய்தும்பயன்கள் உணர்த்தப்பட்டன.

     3. பொ-ரை: சினந்துவந்த நல்ல யானையின் தோலைப் போர்த்து,
புலித்தோலை உடுத்து, கொடிய பாம்பு திருமேனியில்