பக்கம் எண் :

1046

2600.







குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்
     குழாம்பல குளிர்பொய்கை
புலவு புள்ளின மன்னங்க ளாலிடும்
     பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்
     துறையுங்கற் பகத்தைச்சீர்
நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை
     நிற்ககில் லாதானே.             7
2601.







மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேன்
     மதியிலா மையிலோடி
எடுத்த லும்முடி தோள்கர நெரிந்திற
     விறையவன் விரலூன்றக்
கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக்
     கடிக்குளந் தனின்மேவிக்
கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார்
     குணமுடை யவர்தாமே.           8


     7. பொ-ரை: விளங்கும் அழகினை உடையனவான கொடிகள்
கட்டப்பட்ட உயரிய மாடவீடுகளையும் மகளிர் குழாம் நீராடும் குளிர்ந்த
பொய்கைகளையும் உடையதும் புலாலுண்ணும் நாரை முதலிய பறவைகளும்
அன்னங்களும் விளையாடும் சிறப்பினதுமான கடிக்குளத்தில் மலர்கள்
பொருந்திய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிக் கண்ணிமிலைந்து
விளங்கும் கற்பகத்தைப் புகழ்ந்து போற்றி ஏத்துவார்மேல் வினைநில்லா.

     கு-ரை: பூவைசேரும் கூந்தற்கலவையென்பது வாமபாகத்தைக்
குறித்தது. கற்பகத்தை ஏத்துவார்பால் வினைகள் நிற்கமாட்டா.

     8. பொ-ரை: பகைவரைக் கொல்லும் வாட்படையை உடைய
இராவணன் அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்த்த அளவில்
அவனுடைய முடி தோள் கை ஆகியன நெரிந்து அழியுமாறு சிவபிரான்
கால் விரலை ஊன்றிய அளவில், அவன் தன் குற்றத்திற்கு வருந்தி கை
கூப்பி அலற, பேரருள் கொடுத்த ஆனந்தக் கூத்தனைக் கடிக்குளத்தை
அடைந்து ஏத்துபவர் நல்ல குணமுடையவர் ஆவர்.