பக்கம் எண் :

1055

2615.







குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை
     யழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்
     கோயிலெம் பெருமானை
இருண்ட மேதியி னினமிகு வயன்மல்கு
     புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி
     பெறுவது திடமாமே.                11


                    திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: கடைசுருண்ட சடையினனும், இளைஞனும் அழகிய
கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விளங்குபவனும் ஆகிய பெருமான் மீது
கரிய எருமைகள் மிக்கதும், வயல்கள் நிறைந்ததுமாகிய புகலியின்மன்னன்
ஞானசம்பந்தன் அருளிய தெளிந்த பாடல்களை ஓதுவர் சிவகதி பெறுதல்
உறுதி.

     கு-ரை: ‘குருண்டவார் குழற்சடைக் குழகன்’-‘குருள்குஞ்சி’
(தி.2 ப.116 ப.4) குழகன்-இளையன்; அழகன். புகலி-சீகாழி. மன்-இறைவன்.
தெருண்ட-தெளிந்த.

   திருஞானசம்பந்தர் புராணம்

கழிக்கானல் மருங்கணையுங் கடல்நாகை
     யதுநீங்கிக் கங்கை யாற்றுச்
சுழிக்கானல் வேணியர்தம் பதிபலவும்
     பரவிப்போய்த் தோகை மார்தம்
விழிக்காவி மலர்பழனக் கீழ்வேளூர்
     விமலர்கழல் வணங்கி ஏத்தி
மொழிக்காதல் தமிழ்மாலை புனைந்தருளி
     அங்ககன்றார் மூதூர் நின்றும்.

                              -சேக்கிழார்.