பக்கம் எண் :

1057

2617.







விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
     விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய
     விறைவனை யுலகத்தில்
வண்டு வாழ்குழன் மங்கையொர் பங்கனை
     வலஞ்சுழி யிடமாகக்
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ
     டினிதிருந் தமையாலே.                2


பாட்டிற்குரிய புண்ணியம் யாதென்பதே ஐயம். ‘நல்வினைப் பயன்’
என்று கொண்ட முடிவே அதற்குச் சான்றாயிற்று. அந்நல்வினையுள் யாது
என்பது கருத்து. இத்திருமுறையுள் 79 ஆவது திருப்பதிகத்துள் வரும்
பல திருப்பாடலுள் ‘பேதைமார்போலநீ வெள்கினாயே’ ‘மறவல்நீ மார்க்கமே
நண்ணினாய்’ என்றுள்ள சிறப்பையும் அவ்வுண்மையைக் குறித்தருளக்
கருதிய ஸ்ரீ சேக்கிழார் பெருமானார், ‘அவமிலா நெஞ்சமே அஞ்சல் நீ
உய்யுமாறு அறிதி என்று அருளியதையும் உணர்ந்தால், நல்வினைபற்றிய
ஐயம் இல்லாமையும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய
திருவுள்ளத்தை நாம் உணரத்தகும் முறைமையும் தெளிவாகும்.

     வாயாரப் பன்னுதல் பாடுதல்-வாக்கின் வினை. ஆதரித்தல்-
மனத்தின்றொழில். ஏத்துதல்-காயத்தின் செயல்.

     2. பொ-ரை: கடலிடைத்தோன்றிய நஞ்சை உண்டு அமரர்களைக்
காத்தருளிய இறைவனை, உமைகேள்வனை, இவ்வுலகில் வலஞ்சுழியை
இடமாகக் கொண்டு விளங்கும் இறைவனை வணங்கி அவ்விறைவனின்
உண்மைத் தொண்டு புரியும் தொண்டர்களோடு கூடி உறையும் பேறு
பெற்றதால் நிச்சயம் நம் வினைகள் விண்டொழிந்தனவாகும்.

     கு-ரை: இனி திருந்தமையாலே விண்டொழிந்தன வல்வினை,
விண்டு-நீங்கி, கடல்-பாற்கடல். இறைஞ்சு வானவர்-வழிபடும் விண்ணவர்.
தாங்கிய நஞ்சுண்டு காத்தருளிய.

     ‘வண்டார் குழலி’-தேவியார் திருப்பெயர். அவை கோட்டாறு.
கோளிலி, பிரமபுரம், மருகல் என்பவை. மெய்த்தொழில்உண்மைத் தொண்டு.