பக்கம் எண் :

1072

2639.







களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்
     கடிகமழ் சடைக்கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்
     பொருகரி யுரிபோர்த்து
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை
     விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார்
     வருத்தம தறியாரே.                2
2640.







கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி
     மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்
     தாடிய வேடத்தர்
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி
     விற்குடி வீரட்டம்
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப்
     பேணுவ ருலகத்தே.                3


     2. பொ-ரை: களர் நிலத்துப்பூக்கும் கொன்றை மலரையும்,
கதிர்விரியும் மதியத்தையும், மணம் கமழும் சடையில் ஏற்றி, மனம்
பொருந்த வழிபடும் அன்பர்கட்கு அருள் செய்துவரும் பெருமையரும்,
யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து விளங்கும் திருமேனியை
உடையவரும் ஆகிய எம்பெருமானார் உறையும் விற்குடி வீரட்டத்தைச்
செழுமையான மலர்களைக் கொண்டு தூவி நினைந்து ஏத்துவார் வருத்தம்
அறியார்.

     கு-ரை: கதிர்-நிலவு. கடி-மணம். பத்தியை உள்ளத்திற்
கொண்டவரிடத்தில் சிவனருள் விளங்கும். கரி-யானை. மலரால் வழிபட்டு
மனத்தில் நினைத்து வாயால் துதிப்பார்.

     3. பொ-ரை: கரிய கண்டத்தினரும், வெண்மையான திருநீற்றை
அணிந்த மார்பினரும், வலக்கையில் எரியேந்தியவரும், மெல்லிய சடைகள்
நிலத்தில் புரளச் சுடுகாட்டகத்தே ஆடிய கோலத்தினரும், ஆகிய
சிவபிரான் உறையும் மலர்ப்பொய்கைசூழ்ந்த விற்குடி வீரட்டத்தைப்
பிரியாது தொழுபவரைப் பெருந்தவத்தோர் என உலகில் பேணுவர்.