2644.
|
இடங்கொள்
மாகடல் இலங்கையர் கோன்தனை
யிகலழி தரவூன்று
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு
பொருளினன் இருளார்ந்த
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி
விற்குடி வீரட்டம்
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத்
துன்பநோ யடையாவே.
8 |
2645.
|
செங்கண்
மாலொடு நான்முகன் தேடியுந்
திருவ டியறியாமை
எங்கு மாரெரி யாகிய இறைவனை
யறைபுனன் முடியார்ந்த
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன்
விற்குடி வீரட்டம்
தங்கை யால்தொழு தேத்தவல் லாரவர்
தவமல்கு குணத்தாரே. 9
|
8.
பொ-ரை: இடமகன்ற பெரிய கடலால் சூழப்பட்ட இலங்கையர்
மன்னனை அவனது பகைமை அழியுமாறு ஊன்றிய திடமான பெரிய
கயிலாய மலைக்கு உரியவர். சொற்களின் பொருளாய் விளங்குபவர்.
இருளார்ந்த விடமுண்ட கண்டத்தர். அவர் உறையும் பதியாகிய விற்குடி
வீரட்டத்தை எண்ணும் வகையில் இசைபாடி நிற்பவர்களைத் துன்பம்
நோய்கள் அடையா.
கு-ரை:
இகல்-வலி. மிடறு-திருக்கழுத்து. தொடங்கும் ஆறு-
தொடங்கும் நெறி. சிவசம்பந்தமான இசைப்பாட்டு என்றவாறு.
துன்பநோய்-துன்பத்தைத் தரும் நோய்கள்.
9.
பொ-ரை: திருமாலும் நான்முகனும் தேடியும் திருவடி
மற்றும்
திருமுடியைக்காண இயலாதவாறு எரியுருவாக நின்ற இறைவனை, கங்கை
சூடிய முடியோடு, சினம் மிக்க யானையின் தோலினை உரித்துப் போர்த்து
உகந்தவனை, விற்குடி வீரட்டத்துள் கண்டு தம்கையால் தொழுது ஏத்த
வல்லவர்கள் தவம் மல்கு குணத்தோர் ஆவர்.
|