பக்கம் எண் :

1078

109. திருக்கோட்டூர

பதிக வரலாறு:

     சண்பை வேந்தர் மொழி வேந்தரோடு கூடியிருந்து, வற்கடம்போக்கி நாட்டை வாழ்வித்த பின்னர், திருவாஞ்சியம் முதலியவற்றைப்போற்றிக்
கோட்டூரில் ஏத்திப்பாடியது இத்திருப்பதிகம்.

                   பண்: நட்டராகம்

ப.தொ.எண்: 245   பதிக எண்: 109

                   திருச்சிற்றம்பலம்

2648.







நீல மார்தரு கண்டனே நெற்றியோர்
     கண்ணனே யொற்றைவிடைச்
சூல மார் தரு கையனே துன்றுபைம்
     பொழில்கள் சூழ்ந்தழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்
     கொழுந்தேயென் றெழுவார்கள்
சால நீடல மதனிடைப் புகழ்மிகத்
     தாங்குவர் பாங்காவே.           1


     1. பொ-ரை: நீலகண்டனே, நெற்றிக்கண்ணனே, ஒற்றைவிடை
மீது ஏறி வருபவனே, முத்தலைச்சூலம் ஏந்திய கையனே, செறிந்த
பொழில்களால் சூழப்பட்டதும் அழகிய மலர்களின் மணம் கமழ்வதுமாகிய
கோட்டூரில் விளங்கும் கொழுந்தே என்றுகூறி அவனை வணங்க எழுபவர்
மிகப்பெரிதாய சிவலோகத்தில் பெருமானுக்கு அருகில் புகழ் பெறத்
தங்குவர்.

     கு-ரை: நீலம்-நீலநிறமுடைய ஆலகாலவிடம். கோலம்-அழகு.

     கொழுந்து என்பது இறைவன் திருப்பெயர். சாலநீள் தலம்-சிவலோகம்.