2660.
|
விளவு
தேனொடு சாதியின் பலங்களும்
வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானத்
துளவ மான்மக னைங்கணைக் காமனைச்
சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை
யன்றிமற் றறியோமே.
2 |
2661.
|
கோடு
தேன்சொரி குன்றிடைப் பூகமுங்
கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன்
வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடி லாமணி யைத்தொழல் அல்லது
கெழுமுதல் அறியோமே. 3
|
2.
பொ-ரை: விள முதலிய பயன்தரும் மரங்களின்
பழங்களோடு
முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில்,
மால் மகனாகிய காமனைக் கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை,
அம்பிகைபாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம்.
கு-ரை:
விளவு-விளா. வேய்மணி-மூங்கில்முத்து. துளவ மால்
மகன்-துழாய் அணிந்த திருமாலுக்கு மகனான. அளகம்-கூந்தல் ஈற்றடியைச்
சைவர் மறத்தல் கூடாது. (பா. 3, 4 பார்க்க).
3.
பொ-ரை: தேன் சொரியும் குன்றிடைத் தோன்றிக்
கமுகு
முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில்
மாந்துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது
வேறொருவரைத் தொழுதல் அறியோம்.
கு-ரை:
வாடினார்தலை:- பிரம கபாலம். கேடிலாமணி-இத்தலத்து
இறைவர் திருப்பெயர். மாந்துறைமணி என்பன முன் வழங்கியவை.
கெழுமுதல்-நிறைவு, பொருத்தம்.
|