பக்கம் எண் :

1087

2662.







இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
     யிளமரு திலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை
     மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
     ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை அல்லது
     வணங்குதல் அறியோமே.         4
2663.







கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி
     குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
     மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமும் தீபமும்
     பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
     தலைப்படுந் தவத்தோரே.         
5


     4. பொ-ரை: இலவம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி
வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை, பிறை, அரவு
முதலியவற்றைத் தலையில் சூடியவனும் ஆகிய வானோர் தலைவனையன்றி
வணங்குதலறியோம்.

     கு-ரை: இலவம் முதலியவை மரங்கள். ஈஞ்சு-ஈந்து; போலி,
கண்டன்- தலைவன். புனல்-கங்கை. அம்புலி-பிறை. மலை-“அருள்
நிதிதரவரும் ஆனந்த மலையே” திருப்பள்ளியெழுச்சி.

     5. பொ-ரை: கோங்கு, செண்பகம் முதலிய மரங்களை
அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை, தூபம்
தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன்
திருநாமங்களைச் சொல்லுவார் மேலான தவமுடையோராவர்.

     கு-ரை: குரவு-குராமரம். பாங்கு-சிவாகம விதி. பாட்டு-தோத்திரம்.
அவி-நிவேதனம். தாங்குவார்-சிவபூஜாதுரந்தரர். தலைப்படல்-சேர்தல்.