பக்கம் எண் :

1088

2664.







பெருகு சந்தனங் காரகில் பீலியும்
     பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
     புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும்
     பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
     வணங்குதல் செய்வோமே.      6
2665.







நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும்
     நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை
     மாந்துறை யிறையன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய
     அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன்
     நிரைகழல் பணிவோமே.        
7


     6. பொ-ரை: சந்தனம் அகில் முதலிய மரங்களை அடித்துவரும்
காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி, மதி, மன்னர்கள்,
மருத்துக்கள் அன்போடு வழிபடும் திருவடிகளை வணங்குவோம்.

     கு-ரை: பரிவு-பக்தி. இரவி-சூரியன். மருதவானவர்-மருத்துக்கள்.
இதில், இத்தலத்தை வழிபட்டவர்களை உணர்த்தியருளினார்.

     7. பொ-ரை: மல்லிகை முல்லை முதலிய மலர்களை மிகுதியாக வாரி
வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும் காலனைக் காய்ந்தவனும்,
மேருவில்லால் முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப்
பணிவோம்.

     கு-ரை: நறவம்-தேன், மணம், மௌவல்-காட்டு மல்லிகை. இறவில்-
மிகுதியில், அறவணாகிய கூற்று-தருமராசன். வரைவில்-மேருவாகியவில்,
வாங்கி-வளைத்து. எயில்-திரிபுரம்.