பக்கம் எண் :

1092

111. திருவாய்மூர்

பதிக வரலாறு:

     சிவபிரான் சண்பை வேந்தர்க்குத் திருவாய்மூரில் அம்பிகையுடனே
கூட மன்னிய ஆடல் காட்டினார். அதை அவர் மொழிவேந்தர்க்கும்
காட்டிப் போற்றிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

                   பண்: நட்டராகம்

ப.தொ.எண்: 247   பதிக எண்: 111

                   திருச்சிற்றம்பலம்

2670.







தளிரிள வளரென வுமைபாடத்
     தாளம் மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த்
     தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருணல்கி
     வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர்
     வாய்மூ ரடிகள் வருவாரே.            1


     1. பொ-ரை: தளிர்களோடு கூடிய இளங்கொம்புபோல, உமையம்மை
அருகி்ருந்து பாடவும், தாளம் இடவும் ஒப்பற்ற தழலை உடைய கையை
வீசி, விளங்கும் மாணிக்க மணியை உடைய பாம்பை இடையிலே கட்டி
ஆடும் பொய்வேடத்தை உடையவர். தம்மை விரும்பும் பருத்த
தனபாரங்களை உடைய மகளிர்க்கு அருள் நல்கித் திருநீறுபூசி, முடிமேல்
பிறையணிந்து காட்சி தருபவர். வாய்மூரடிகளாகிய அவர் வருவார் காணீர்.

     கு-ரை: இப்பதிகத்தில் அகத்துறை அமைந்தமை உணர்க.
உமையம்மையார் தளிர் இளவளர். எனப் பாடவும் தாளம் இடவும் ஒருதாள்
எடுத்து ஆடும் கிறிமையார். கிறிமை-பொய்ம்மை. விளர்-வெழுப்பு. ‘மன்னிய
ஆடல்காட்ட’ எனச் சேக்கிழார் சுவாமிகள் அருளியதை நோக்கின், இவர்
காணீர் என்று இருத்தல் வேண்டும் எனத் தோன்றுகின்றது. அதில் ககர
உயிர்மெய் ஏட்டில் கெட்டிருக்க ரகர ஆகாரமாகக் கொண்டனர்போலும்.