பக்கம் எண் :

1103

2690.



மாயனும்மல ரானுங்கைதொழ
ஆயவந்தண னாடானை
தூயமாமலர் தூவிக்கைதொழத்
தீயவல்வினை தீருமே.         10
2691.



வீடினார்மலி வெங்கடத்துநின்
றாடலானுறை யாடானை
நாடிஞானசம் பந்தனசெந்தமிழ்
பாடநோய்பிணி பாறுமே.       11

                       திருச்சிற்றம்பலம்



     10. பொ-ரை: மாயவனாகிய திருமாலும், தாமரைமலர் மேலுறையும்
நான்முகனும் கைகளால் தொழுது வழிபடுதற்குரியவனாகிய அந்தணன்
உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனைத் தூய மலர்களைத்
தூவிக்கைகளால் தொழுபவர்களின் தீய வல் வினைகள் தீரும்.

     கு-ரை: ஆய-ஆகிய. தீயவினை; வல்வினை. அந்தணன்:-சிவபிரான்.
மலர்தூவிக் கையால் தொழ வினை தீரும்.

     11. பொ-ரை: ஊழிக்காலத்து இறந்தவர்களின் உடல்கள் நிறைந்து
எரிந்து வேகும் சுடுகாட்டுள் நின்று உருத்திரதாண்டவமாடும் இறைவன்
உறையும் திருவாடானையை அடைந்து ஞானசம்பந்தன் அருளிய இச்செந்
தமிழ் மாலையைப் பாடி வழிபடுபவர்களின் நோய்களும் பிணிகளும் நீங்கும்.

     கு-ரை: வீடினார்-இறந்தவர். வெங்கடம்-வெப்பமுடைய காடு.
கள்ளிமுதுகாட்டிலாடி பாடலால் நோயும் பிணியும் அழியும்.

           சங்கற்ப நிராகரணம்

ஈசனரு ளாலெரியிட் டேடெடுத்து வாதுவென்ற
பூசுரனைப் பாதநினைப் போம்.

-உமாபதி சிவாசாரியார்.