பதிக வரலாறு:
திருக்காளத்தி
மலையின் மிசை வீற்றிருந்து ஏழுலகும் உடைய
தேனை, சண்பை ஆளும் புரவலனார் பருகி ஆர்ந்து, தமிழ்வழக்கு
நிகழாத வடக்கிலும் குடக்கிலும் உள்ள தானந்தோறும் சென்று தமிழிசை
பாடுஞ் செய்கை போல வடகயிலை வணங்கிப் பாடித் திருக்கேதாரம்
தொழுது இசை திருந்தப் பாடியருளியது இத்திருப்பதிகம்.
பண்:
செவ்வழி
ப.தொ.எண்: 250
பதிக எண்: 114
திருச்சிற்றம்பலம்
2703.
|
தொண்டரஞ்சு
களிறும்
அடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு
செய்யு மிடமென்பரால்
வண்டுபாட மயிலால
மான்கன்று துள்ளவரிக்
கெண்டைபாயச் சுனைநீல
மொட்டலருங் கேதாரமே. 1 |
1. பொ-ரை:
அடியவர் ஐம்புலக்களிறுகளையும் அடக்கி ஆண்டு,
நாண்மலர்களைக் கொண்டு இண்டைகட்டிச் சார்த்தி வழிபாடு செய்யுமிடம்,
வண்டுகள் பாடவும், மயில்கள் ஆர்ப்பரிக்கவும், மான் கன்றுகள் துள்ளவும்,
சுனைகளில் கெண்டைகள் பாய்வதால் நீலமலர் மொட்டுக்கள் அலரவும்
விளங்கும் திருக்கேதாரமாகும்.
கு-ரை:
அஞ்சுகளிறும்-ஐம்புலன்களாகிய ஆண்யானைகளையும்.
ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத்துள்
இருக்கும் புராணர் (தி.1 ப.32 பா.6.) இண்டை கட்டி வழிபாடு செய்தல்
வடநாட்டிலும் உண்டுபோலும்! என்பரால் என்றது, காணாது கேட்டுப்
பாடியருளியதைக் குறித்தது.
|