பக்கம் எண் :

1117

115. திருப்புகலூர்

பதிக வரலாறு:

     ‘ஓதாது ஞானமெல்லாம் உணர்ந்தார்’ ஆகிய சண்பை வேந்தர்,
திருப்புகலூர்த் திருத்தொண்டரொடும் செம்மை முருகனார் எதிர்கொள்ளத்
திருக்கோயிலை எய்தி, உள்புகுந்து, தாழ்ந்து, விழுந்து, எழுந்து, நெக்குருகும்
சிந்தையில் அன்பு பொங்கவும் கண்மலரில் நீரருவி செய்யவும் சார்த்திய
தமிழ்த் தொடைமாலையுள் ஒன்று இத்திருப்பதிகம்.

                    பண்: செவ்வழி

ப.தொ.எண்: 251                             பதிக எண்: 115

                   திருச்சிற்றம்பலம்

2714.







வெங்கள்விம்மு குழலிளைய
     ராடவ்வெறி விரவுநீர்ப்
பொங்குசெங்கட் கருங்கயல்கள்
     பாயும்புக லூர்தனுள்
திங்கள்சூடித் திரிபுரம்ஓர்
     அம்பால்எரி யூட்டிய
எங்கள்பெம்மான் அடிபரவ
     நாளும்இடர் கழியுமே.         1


     1. பொ-ரை: விரும்பத்தக்க தேன் விம்மும் மலர்கள் கூடிய
கூந்தலினராகிய இளம்பெண்கள் ஆட, மணம் விரவும் நீர்நிலையில்
வாழும் செம்மைமிக்க கண்களை உடைய கரிய கயல்மீன்கள் துள்ளிப்
பாயும் புகலூரில் விளங்கும் திங்கள் சூடித் திரிபுரங்கள் ஓரம்பால்
எரியூட்டிய எங்கள் பெருமான் திருவடிகளைப்பரவ இடர் கெடும்.

     கு-ரை: குழலில் மலரினது கள் இருத்தலால், ‘வெங்கள் விம்மு
குழல்’ எனப்பட்டது.

     செங்கட் கருங்கயல்; திரிபுரம் ஓரம்பு:- முரண் டொடை. நாளும்
பரவ இடர்கழியும். 149