பக்கம் எண் :

1118

2715.







வாழ்ந்தநாளும் இனிவாழு
     நாளும்இவை யறிதிரேல்
வீழ்ந்தநாளெம் பெருமானை
     யேத்தாவிதி யில்லிகாள்
போழ்ந்ததிங்கட் புரிசடையி
     னான்றன் புகலூரையே
சூழ்ந்தவுள்ளம் முடையீர்கள்
     உங்கள்துயர் தீருமே.            2
2716.







மடையின்நெய்தல் கருங்குவளை
     செய்யமலர்த் தாமரை
புடைகொள்செந்நெல் விளைகழனி
     மல்கும்புக லூர்தனுள்
தொடைகொள்கொன்றை புனைந்தானொர்
     பாகம்மதி சூடியை
அடையவல்லவர் அமருலகம்
     ஆளப்பெறு வார்களே.          3


     2. பொ-ரை: இதுவரை வாழ்ந்த நாளையும் இனி வாழும் நாளையும்
அறிவீரேயானால் எம்பெருமானை ஏத்தாத நாள்கள் வீழ்ந்த நாட்கள்
என்றறிந்தும், எம்பெருமானை ஏத்தும் நல்லூழாகிய விதி இல்லாதவர்களே!
பிறை மதிசூடிய சடையினான்தன் புகலூரை மறவாது நினையும் உள்ளம்
உடையீர்களாயின் உங்கள் துயர் தீரும்.

     கு-ரை: உடம்பொடு உயிர்வாழ்வின் இறந்த காலத்தையும் அறிவீர்
எனில்:- ‘ஆர் அறிவார் சாநாளும் வாழ்நாளும்’ (தி.1 ப.41 பா.3.) எம்
பெருமானை ஏத்தாத நாள் வாழ்ந்த நாளாகா. ‘நின்திரு வருளே பேசின்
அல்லால் பேசாத நாளெல்லாம் பிறவாநாளே’ (தி.6 ப.47 பா.10). சூழ்ந்த-
ஆராய்ந்த.

     3. பொ-ரை: மடைகளில் நெய்தல், குவளை, செந்தாமரைமலர்
ஆகியன விளங்க, அருகில் செந்நெல் விளையும் வயல்களை உடைய
புகலூரில் தன்பாகத்தே கொன்றை மாலை சூடி மதிபுனைந்து உமையோடு
விளங்கும் சிவபிரானை அடைய வல்லவர் அமருலகு ஆள்வர்.