பக்கம் எண் :

1125

2726.







விலங்கலொன்று சிலையாமதில்
     மூன்றுடன் வீட்டினான்
இலங்குகண்டத் தெழிலாமை
     பூண்டாற் கிடமாவது
மலங்கியோங்கிவ் வருவெண்டிரை
     மல்கிய மால்கடல்
கலங்கலோதங் கழிசூழ்
     கடல்நாகைக் காரோணமே.    2
2727.







வெறிகொளாருங் கடற்கைதை
     நெய்தல்விரி பூம்பொழில்
முறிகொண்ஞாழல் முடப்புன்னை
     முல்லைமுகை வெண்மலர்
நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு
     நாதற் கிடமாவது
கறைகொளோதங் கழிசூழ்
     கடல்நாகைக் காரோணமே.    3


     2. பொ-ரை: மேருமலை ஒன்றை வில்லாகக் கொண்டு
மும்மதில்களை அழித்தவனும் அழகிய கழுத்தில் ஆமை ஓட்டைப்
பூண்டவனும் ஆகிய இறைவனுக்கு இடம், கலங்கி ஓங்கி வரும்
வெண் திரைகளை உடைய கடலின் கரையில் கலங்கிய
நீர்ப்பெருக்கோடு கூடிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக்காரோணமாகும்.

     கு-ரை: விலங்கல்-மேருமலை. ஆமை கழுத்திற் பூண்டான்.
மலங்கி- அலைந்து.

     3. பொ-ரை: தளிர்களோடு கூடிய ஞாழல்மலர், வளைந்த
புன்னை மரத்தில் பூத்தமலர்கள், வெள்ளிய முல்லையரும்புகள், தேன்
நிறைந்த கொன்றைமலர் ஆகியவற்றை விரும்பி அணியும் பெருமானுக்கு
இடம், மணம் கமழும் தாழைமலர், நெய்தல்மலர் ஆகியவை நிறைந்த
பொழில்களால் சூழப்பட்ட, கரிய ஓதம் பரவி விளங்கும் கடல்
நாகைக்காரோணமாகும்.

     கு-ரை: வெறி-மணம். கைதை-தாழை. முறி-தளிர். ஞாழல்-மரம்,
கோங்கு. நறை-தேன். கறை-கறுப்பு.