பக்கம் எண் :

1131

117. திருவிரும்பைமாகாளம்

பதிக வரலாறு:

     பிள்ளையார் திருவக்கரையை அணைந்து, முகங்களொடு திகழும்
மூர்த்தியை வணங்கிச்சென்று திருவிரும்பையுள்ளே மாகாளத்தைப் போற்றி
அச்செக்கர் மேனியாரைப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

                    பண்: செவ்வழி

ப.தொ.எண்: 254                               பதிக எண்: 117

                   திருச்சிற்றம்பலம்

2736.







மண்டுகங்கை சடையிற்
     கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரமூன்
     றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய்
     விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில்
     சுலாய்நின்ற மாகாளமே.    1


     1. பொ-ரை: கங்கையைச் சடையில் கரந்து, பிறைமதியைச் சூடி,
மான் ஏந்திய கையால் கணைதொடுத்து முப்புரங்களை எரித்த குழகனது
இடம், எண்திசையும் புகழ்பெற்று விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும்
வண்டுகள் இசைபாடி முரலும் பொழில் சூழ்ந்து விளங்குவதுமாகிய
திருமாகாளமாகும்.

     கு.ரை: கங்கைச்சடையன், பிறைசூடி, மானேந்தி, முப்புரமெரித்த
முதல்வன். திசையெலாம் பரவிய புகழுடைய தலம். ‘மான்’ உமாதேவியுமாம்.

     ‘விற்றாங்கி யகரம் வேல்நெடுங்கண்ணி வியன் கரமே’ (அப்பர்)
இசையால் திசைபோயது’, சுலாய்-சுற்றி. ஊர் இரும்பை; கோயில் மாகாளம்.