பக்கம் எண் :

1132

2737.







வேதவித்தாய் வெள்ளைநீறு
     பூசி வினையாயின
கோதுவித்தா நீறெழக்
     கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர்க்
     கும்மிடம் இரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர்
     தொழநின்ற மாகாளமே.      2
2738.







வெந்தநீறும் எலும்பும்
     அணிந்த விடையூர்தியான்
எந்தைபெம்மா னிடம்எழில்
     கொள்சோலை யிரும்பைதனுள்
கந்தமாய பலவின்
     கனிகள் கமழும்பொழில்
மந்தியேறிக் கொணர்ந்துண்
     டுகள்கின்ற மாகாளமே.       3


     2. பொ-ரை: வேதவித்தாய், வெண்ணீறுபூசி, வினைகள் யாவற்றையும்
அழித்து, கொடிய திரிபுரங்களை நீறெழச் செய்து, குற்றங்களுக்கு
விதையானவற்றைத் தீர்த்து, அருள்புரியும் சிவபிரானது இடம், திருஇரும்பை
நகரில் உள்ளதும், மாதவத் தோரும் மறையோரும் தொழ நின்றதுமான
திருமாகாளமாகும்.

     கு-ரை: மாதவத்தோரும் மறையோரும் தொழ நின்ற சிறப்புடையது
மாகாளம். சிவபிரான் வேதவித்து, வெண்ணீறாடி, வினையெலாம் நீறுபட
அழித்தவன்.

     கோதுவித்தா என்றது பிழை. கோத வித்தாய் என்றிருத்தல் வேண்டும்.
ஏதவித்து - குற்றத்திற்கு விதை.

     3. பொ-ரை: திருவெண்ணீற்றையும் எலும்பையும் அணிந்தவனும்,
விடைஊர்தியனும், எந்தையும், தலைவனுமாகிய இறைவனது இடம், அழகிய
சோலைகள் சூழ்ந்ததும் மணம் கமழும் பலாக்கனிகளை மந்திகள் ஏறிப்
பறித்து உண்டு திரியும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருஇரும்பை நகரில்
உள்ள திருமாகாளம் ஆகும்.