பக்கம் எண் :

1138

118. திருத்திலதைப்பதி

பதிக வரலாறு:

     சொல் வேந்தரும் சண்பை நல்வேந்தரும் திருவீழிமிழலை
பேணுபெருந்துறை ஆகிய சிவதலங்களை வழிபட்ட காலத்தில்
திலதைப்பதியை அடைந்து மதிமுத்தத்தில் இறைவனைப் பணிந்து
பாடியது இத்திருப்பதிகம்.

                   பண்: செவ்வழி

ப.தொ.எண்: 254                              பதிக எண்: 118

                  திருச்சிற்றம்பலம்

2747.







பொடிகள்பூசிப் பலதொண்டர்
     கூடிப் புலர்காலையே
அடிகளாரத் தொழுதேத்த
     நின்ற அழகன்னிடம்
கொடிகளோங்கிக் குலவும்
     விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர்
     மணங்கமழும் மதிமுத்தமே.    1

     1. பொ-ரை: வைகறைப்போதில் தொண்டர்கள் பலரும் கூடி
நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவோடு திருவடிகளை மனமாரத்
தொழுதேத்தநின்ற அழகனது இடம், கொடிகள் ஓங்கி அசைந்தாடுவதும்
திருவிழாக்கள் இடையறாமல் நிகழ்வதுமாகிய திருத்திலதைப்பதியிலுள்ள
அழகிய சோலைகளின் மலர்கள் மணம் கமழ்ந்து விளங்கும் மதிமுத்தம்
கோயிலாகும்.

     கு-ரை: தலம்- திலதைப்பதி, கோயில்- மதிமுத்தம். அடியார்கள்
பலர் வைகறையிலே நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவுடன்
திருக்கோயில் வழிபாடு செய்த பண்டைய உண்மை நிகழ்ச்சி
குறிக்கப்பட்டது. ஆரத்தொழுதல்- ‘தலையாரக் கும்பிட்டு’ ‘வாயாரப் பாடுந்
தொண்டரித்தகத்தான்’ ‘நாவார நம்பனையே பாடப் பெற்றோம்’. ‘கையாரத்
தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும்’ என்பவை முதலியவற்றால்
செய்வனதிருந்தவும் நிறையவும் செய்தல் வேண்டும் என்று வற்புறுத்தல்
காண்க.