பக்கம் எண் :

1139

2748.







தொண்டர்மிண்டிப் புகைவிம்மு
     சாந்துங்கமழ் துணையலும்
கொண்டுகண்டார் குறிப்புணர
     நின்ற குழகன்னிடம்
தெண்டிரைப்பூம் புனலரிசில்
     சூழ்ந்த திலதைப்பதி
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ்
     சோலைம் மதிமுத்தமே.     2
2749.







அடலுளேறுய்த் துகந்தான்
     அடியார் அமரர்தொழக்
கடலுள்நஞ்ச அமுதாக
     வுண்ட கடவுள்ளிடம்
திடலடங்கச் செழுங்கழனி
     சூழ்ந்த திலதைப்பதி
மடலுள்வாழைக் கனிதேன்
     பிலிற்றும் மதிமுத்தமே.     3

     2. பொ-ரை: தெளிந்த நீரையுடைய அரிசிலாற்றங்கரையிலமைந்த
திலதைப்பதியில் விளங்குவதும், வண்டுகள் கெண்டி இசை பயிலும்
மலர்களை உடைய சோலைகளால் சூழப்பெற்றதுமாகிய மதிமுத்தம்,
நெருங்கிவந்து நறுமணப் புகையும் சாந்தமும் மாலைகளும் கொண்டு
வழிபடும் அடியார்களின் கருத்தறிந்து. அவர்கட்கு அருள் புரியும் குழகன்
இடமாகும்.

     கு-ரை: மிண்டி - நெருங்கி. முத்தம் - முற்றம்; மரூஉ. ‘நிலாமுற்றம்’
‘சத்திமுற்றம்’. கண்டார் - தரிசனம் புரிந்த அடியவர். குறிப்பு - கருத்து.
அரிசில் ஆற்றங்கரையில் உள்ளது இத்தலம்.

     3. பொ-ரை: திடல்களைச்சுற்றி வயல்கள் சூழ்ந்து விளங்குவதும்,
மடல்வழியாக வாழைக்கனிசாறு ஒழுகுவதும் ஆகிய வளங்களை உடைய
திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம், வலிய விடையை ஏறிச் செலுத்தி
மகிழ்பவரும், அடியார்களும் அமரர்களும் தொழுமாறு கடலுள் எழுந்த
நஞ்சை அமுதாக உண்டருளியவருமாகிய கடவுள் விரும்பி உறையுமிடமாகும்.