பதிக
வரலாறு:
திருஞானசம்பந்தர்
திருக்கு மூக்கினை அணைந்து திருக்கீழ்க்
கோட்டத்திருந்த வான் பொருளினை வணங்கி, காரோணத்தாரமுதைப்
பணிந்தேத்தி, திருநாகேச்சுரத்து அமர்ந்த செங்கனகத் தனிக்குன்றைப்பாடி
அம் மாநாகம் அருச்சித்த மலர்க் கமலத்தாள் வணங்கி நாணாளும்
பரவியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம்.
பண்:
செவ்வழி
ப.தொ.எண்: 255
பதிக எண்: 119
திருச்சிற்றம்பலம்
2758.
|
தழைகொள்சந்
தும்மகிலும்
மயிற்பீலி யுஞ்சாதியின்
பழமும்உந்திப் புனல்பாய்
பழங்காவிரித் தென்கரை
நழுவில்வானோர் தொழநல்கு
சீர்மல்கு நாகேச்சரத்
தழகர்பாதந் தொழுதேத்த
வல்லார்க் கழகாகுமே. 1 |
1.
பொ-ரை: தழைகளோடு கூடிய சந்தன மரங்கள், அகில்
மரங்கள், மயிற்பீலி, நல்லபழங்கள் ஆகியவற்றைப்புனலில் உந்தி வந்து
பாயும் பழமையான காவிரியின் தென்கரையில் வானோர் விலகாது தொழ
அருள் நல்கும் சிறப்புமிக்க நாகேச்சுரத்தில் விளங்கும் அழகர்
பாதங்களைத் தொழுது போற்றவல்லார்க்கு அழகு நலம் வாய்க்கும்.
கு-ரை:
சந்து-அகில், பீலி, சாதிப்பழம் எல்லாம் காவிரி
வெள்ளத்தால் கொள்ளப்பட்டவை, நழுவு.
இல்-விலகுதல்
இல்லாத. அழகராதலின் வணங்க வல்லார்க்கும்
அழகு அருள்கின்றார்.
|