2759.
|
பெண்ணொர்பாகம்
அடையச்
சடையிற் புனல்பேணிய
வண்ணமான பெருமான்
மருவும் இடம்மண்ணுளார்
நண்ணிநாளுந் தொழுதேத்தி
நன்கெய்து நாகேச்சரம்
கண்ணினாற் காணவல்லா
ரவர்கண் ணுடையார்களே. 2 |
2760.
|
குறவர்கொல்லைப்
புனங்கொள்ளை
கொண்டும் மணிகுலவுநீர்
பறவையாலப் பரக்கும்
பழங்காவிரித் தென்கரை
நறவநாறும் பொழில்சூழ்ந்
தழகாய நாகேச்சரத்
திறைவர்பாதந் தொழுதேத்த
வல்லார்க்கிட ரில்லையே. 3 |
2. பொ-ரை:
ஒருபாகத்தே உமையையும், சடையில் நீர் வடிவான
கங்கையையும், கொண்ட அழகிய பெருமான் அமரும் இடம் ஆகிய,
மண்ணுலகத்தோர் நாள்தோறும் வந்து வணங்கி நன்மைகள் பெறும்
நாகேச்சரத்தைக் கண்ணால் காண்பவரே கண்ணுடையராவர்.
கு-ரை:
நன்கு-சிவபுண்ணியம் முதலிய நன்மைகள். கண்ணினால்
என்றது காண்டற்குக் கடவுளையே பொருளாக் கொண்டகண் என்று
அதன் சிறப்புணர்த்த.
3. பொ-ரை:
குறவர் வாழும் குறிஞ்சிப்புனம், முல்லைநிலம்
ஆகியவற்றைக் கொள்ளைகொண்டு மணிகள் குலாவும் நீரைப் பரவச்
செய்யும் காவிரித் தென்கரையில் தேன்மணம் கமழும் பொழில் சூழ்ந்து
அழகியதாய் விளங்கும் நாகேச்சுரத்து இறைவர் பாதங்களைத் தொழுது
ஏத்த வல்லார்க்கு இடர்இல்லை.
கு-ரை:
ஆல-அசைய. அழகாய நாகேச்சுரம். நாகேச்சரத்து அழகர்
(பா. 1.) என்றவற்றால் தலமும் மூர்த்தியும் அழகுடைமை உணர்க.
|