பக்கம் எண் :

1152

120. திருமூக்கீச்சரம்

பதிக வரலாறு:

     ‘கற்குடி மாமலைமேல் எழுந்த கனகக் கொழுந்தினைப் போற்றி
நற்றமிழ்மாலை புனைந்தருளிய ஞானசம்பந்தர், புலன்களைந்தும்
செற்றவரது திருமூக்கீச்சரம் பணிந்து பாடியது இத்திருப்பதிகம்.

                  பண்: செவ்வழி

ப.தொ.எண்: 256   பதிக எண்: 120

                  திருச்சிற்றம்பலம்

2769.




 

சாந்தம்வெண்ணீறெனப்பூசி
     வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை
     யொடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந்
     நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள்
     செய்கின்றதோர் மெய்ம்மையே.      1


     1. பொ-ரை: சந்தனம்போலத் திருநீற்றை உடல் முழுதும் பூசி,
கங்கையைச் சடைமீது வைத்துள்ளவராகிய சிவபிரான், காந்தள் போன்ற
கைவிரல்களை உடைய உமையம்மையோடு கூடியிருந்ததற்குரிய காரணத்தை
ஆராய்ந்தறிந்தவர்கள் யார்? கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட
மூக்கீச்சரத்துள் விளங்கும் இறைவன் செய்யும் மெய்மை இதுவாகும்.

     கு-ரை: வெண்ணீறு சாந்தம் எனப்பூசி ‘சாந்தம் ஈதுஎன்று எம்
பெருமான் அணிந்த நீறு’ (தி.1 ப.52 பா.7). காந்தள் ஆரும் விரல் -
காந்தளை ஒத்த கைவிரல்கள். ஏழை-உமாதேவியார். கடவுள் நிறைவு
ஆய்ந்து கொண்டறியத்தக்கது.

     கோச்செங்கட்சோழநாயனார் கட்டுவித்த மாடக்கோயில் ஆதலின்
வேந்தன் மூக்கீச்சரம் எனப்பட்டது. இப்பதிகத்தில் வரலாறு பற்றிய
உண்மைகளைக் காண்க.