ஒரு மனிதன்
பிறவி நீங்க வேண்டுமானால் ஆசாரியரைச்
சரணடைய வேண்டும். அவர் கற்பித்த வழிநின்று திருமுறைகளைப்
பன்னாளும் பயின்று ஓதுதல் வேண்டும், ஓதினால், சினம் அகலும்,
சினம் அகன்றால் நல்ல குருநாதர் நமக்கு, அஞ்செழுத்தை உபதேசிப்பார்.
அவ்வஞ்செழுத்தை, நின்றாலும் இருந்தாலும், கிடந்தாலும் நடந்தாலும்,
மென்றாலும் துயின்றாலும், விழித்தாலும் இமைத்தாலும், ஓதியும் உணர்ந்தும்
உருவேற்றினால், சிவபூசைபுரியும் வாய்ப்பும் ஆசாரியனால் கிடைக்கும்.
அச்சிவபூசையைப்
பன்னாளும் பயின்று முறையாகப் பூசித்து
வந்தால் பாசம் அகலும், பாசம் அகன்றால் பிறவி அறும். வீடு பேறு
கிட்டும். அற்றது பற்றெனில் உற்றது வீடன்றோ
இதனையே
ஞானசம்பந்தரும் தமது தேவாரத்தில் அற்றவர்க் கற்ற
சிவன் என்று ஓதினார். பற்றற்ற பரம்பொருள் பற்றற்றவர்கட்குப் பற்றுக்
கோடாயிருந்து அருள் புரியும் என்பது இதன் கருத்து.
வீடும்
ஞானமும்:
குருஞானசம்பந்தர்
பாடலில், திருமுறைகள் ஓதாய் என்று
பிரித்துச் சொன்னால், திருமுறைகளை ஓதுவாயாக என்பது பொருளாகும்.
திருமுறைகளோ தாய் என்று பிரித்துச் சொன்னால் திருமுறைகளே
நமக்கெல்லாம் தாயாயிருந்து அருள்புரிந்து வீடுபேறு நல்கும் என்பது
பொருளாகும்.
திருமுறைகளை ஓதுவிப்பதற்கும்
ஒரு ஆசான் வேண்டும்.
அதைத்தான் ஞானசம்பந்தர் திருவலஞ்சுழித் தேவாரத்தில்
குறிப்பிடுகின்றார்.
வீடும், அதற்கு
ஏதுவாகிய ஞானமும் வேண்டுவீரானால்
விரதங்களால் மட்டும் ஞானமும் வீடும் கிடைத்து விடாது. வலஞ்சுழியில்
நமக்கெல்லாம் ஞானத் தந்தையாக எழுந்தருளியுள்ள ஈசனை நாடுவதும்,
ஞானசம்பந்தனுடைய செந்தமிழைக் கொண்டு இசை பாடும் ஞானம் வல்ல
ஓதுவாரடி சேர்வதுமே உனக்கு வீடும், அதற்கு ஏதுவாகிய ஞானமும்
கிடைத்தற்கு வாயில் என்கிறார் ஞானசம்பந்தர். எனவே, முதலில்
திருமுறைகளை ஓதுவாரடி சேர்க, என்று உபதேசிக்கிறார்.
|