1478.
|
வண்டலங்கழ
னிம்மடை வாளைகள் பாய்புனற்
புண்ட ரீகம லர்ந்தும துத்தரு பூந்தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே. 10 |
1479.
|
மகர
வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே. 11 |
திருச்சிற்றம்பலம்
10.
பொ-ரை: வளம்மிக்க வண்டல் மண்ணை உடைய வயல்களின்
மடைகளில் வாளை மீன்கள் பாயும் நீர் நிலைகளில் தாமரைமலர்கள்
மலர்ந்து தேனைத்தரும் புந்தராய் என்னும் சீகாழிப் பதியில், தொண்டர்கள்
வந்து வணங்கும் கழல் அணிந்த பழமையான திருவடிகளை உடைய
இறைவரே! சமணர்களும் சாக்கியர்களும் உம்மைக் கூறும் பொருளற்ற
பழிமொழிகட்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
கு-ரை:
வண்டல்-வெள்ளத்தால் அடித்துக்கொண்டு வரப்பட்ட
உரம்மிக்க மணல். மடை - நீர்மடை. புண்டரிகம்-தாமரை. தொல்
கழல்-திருவடியின் தொன்மை. ஆதியும் மத்தியும் அந்தமும் இல்லாதது.
கழல் என்பது எருதினது கொம்பு போல் அமைந்தது. பகைவர் உடம்பில்
ஊறுபடுத்த, வலக்காலில் தரிக்கப்படுவது. தாள், களங்கொளக் கழல்ப
றைந்தன கொலல் லேற்றின் மருப்புப் போன்றன (புறநானூறு.4.3-4)
என்னும் அடிகளால் அறிக. தேய்ந்த பின் மழமழவென்றாகி எருதின்
கொம்பையொத்தது. வடிவில் முழுதும் ஒப்பது, குண்டர் - சமணர்,
குறியின்மை - பிழையாதகுறி இல்லாமை. (தி.2 ப.82 பா.10) இதில் புறப்
புறச்சமயத்தார் செய்யும் நிந்தையின் பொருளின்மையை வினாவினார்.
11.
பொ-ரை: சுறா மீன்களை உடைய பெரிய கடல் நீர்
வந்து
சேரும் மணல் நிறைந்த கடற்கரைச் சோலைகளைக் கொண்டுள்ள
புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், அழகுமிக்க பூந்தராயில்
எழுந்தருளிய இறைவரைப் பரவிப்பாடிய இப்பதிகப் பாடல் பத்தையும்
ஓதவல்லவர் தீவினை அகல்வர். அவர்கள் நல்வினை உடையவர் ஆவர்.
|