கடியார்ந்த
பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன்சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே
(தி. 2 ப. 43 பா. 11) |
என்றும் கூறுகிறார்.
இப்பாடல்களில் மண்ணின்றி விண் கொடுக்கும்
என்பதும், இல்லையாம் மறுபிறப்பே என்பதும் இப்பெருமான் பவரோக
வைத்தியநாதர் என்பதைக் குறிப்பன என உணரலாம்.
அதிசூக்கும
பஞ்சாக்கரம்:
மயானத்
தலங்கள் நான்கு என்பர். காசி மயானம், கச்சி மயானம்,
கடவூர் மயானம், நாலூர் மயானம் என்பன அவை. அந்நான்கனுள்
முன்னிரண்டும் வைப்புத்தலங்கள். பின்னிரண்டும் பாடல்பெற்ற தலங்கள்.
நாலூர் மயானத் திருப்பதிகத்தில் அதிசூக்கும பஞ்சாட்சரமாகிய சிவாய
என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. பத்தாவது பாடலில்,
துன்பாய
மாசார் துவராய போர்வையார்
புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பால் சிவாயஎனா நாலூர் மயானத்தே
இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே
(தி. 2 ப. 46
பா. 10) |
என்று உள்ளது. அப்பர்,
சுவாமிகள், ஐந்தாம் திருமுறையில்
திருப்பாலைத்துறைத் திருக்குறுந்தொகை ஆறாவது பாடலில்.
விண்ணி
னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாதுசி வாயஎன்று
எண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே |
என்று இவ் அதிசூக்கும
பஞ்சாட்சரத்தைக் குறித்துள்ளார். இதற்கு முன்பே
சம்பந்தர் குறித்துள்ளார் என்பது இப் பதிகத்தால் புலனாகின்றது.
|