பக்கம் எண் :

296

 4. திருவான்மியூர்

பதிக வரலாறு:

     அழுது உலகை வாழ்வித்த ஆளுடைய பிள்ளையார் திருமயிலைப்
பதியில் அமர்ந்தருளிய நாளில், பல தலங்களை வணங்கிச்சென்று
நிறைகாதலருத்தியொடும் திருவான்மியூரை அணைந்து, திருத்தொண்டர்
எதிர்கொள்ளச்சென்று, திருக்கோபுரத்தை வணங்கி வலங்கொண்டு
உள்ளணைந்து, பிறவி மருந்தான பெருந்தகையை வினாவுரைச்
சொன்மாலையாகப் பாடியது இத்திருப்பதிகம்.

                       வினாவுரை

                     பண்: இந்தளம்

ப. தொ. எண்: 140                              பதிக எண்: 4

                    திருச்சிற்றம்பலம்


1502.





கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
றிரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையு லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.      1


     1. பொ-ரை: கடலின்கண் விளங்கும் சங்குகளும் வெண்ணிறமான
இப்பிகளும் கரையில் வந்துலாவுமாறு அலைகள் வீசுவதும், அவ்வலைகளை
உடைய கழிகளில் மீன்கள் பிறழ்வதுமான திருவான்மியூரில், எல்லோராலும்
புகழப்படும் பொருளாய் உலகனைத்தையும் ஆட்சி புரிபவராய் விளங்கும்
இறைவரே! மலைமாது எனப்படும் உமையம்மையை ஓருடம்பில்
உடனாகக்கொண்டுள்ள மாண்பிற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

     கு-ரை: கடலில் விளங்கும் சங்குகளும் வெள்ளை யிப்பி களும்
கரையில்வந்து உலாவும்படி வலியனவாக அலைகள் வீசுகின்றன.
அவ்வலைகளையுடைய கழிகளில் மீன்கள் பிறழ்கின்றன. உகளல்-பிறழ்தல்.
அத்தகைய வளமுடைய திருவான்மியூரிலெழுந்தருளிய சிவபிரானை
முன்னிலையாக்கி வினாவியருளினார். ‘சொற்பொருளாயும் எல்லா
உலகங்களையும் ஆளுபவராயும் இருக்கும் சுவாமீ! மலைமங்கையுடனாகிய
மாட்சியை மொழிவீர்’ என்றார். மாதியலும் பாதியனான உண்மையை
வினாவிற்று இத்திருப்பாடல். சொல் -