பக்கம் எண் :

32

கூறுவர். இதற்குச் சான்றாக,

“ஒண் கெழுவு
 ஞாலத்தினர் அறிய மன்னுநனிபள்ளியது
 பாலைதனை நெய்தலாக்கியும்”

என நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருவுலாமாலை பகர்கிறது.

     “காரைகள் கூகை முல்லை.....” ( தி. 2 ப. 84 பா. 1 ) என்று
தொடங்குவது ஞானசம்பந்தர் அருளிய இத்தலப்பதிகம். காரை, கூகை
முதலியன பாலை நிலத்திற் குரியன. இங்குத் திணை
மயக்கமாயிருக்கலாமெனத் தோன்றுகிறது. இத்தலம் நெய்தல் நிலப்பகுதியில்
உள்ளது. மருத நில வளம் உள்ளதாகவே இன்று காண்கிறோம். சேக்கிழார்
அதுபற்றிக் குறிப்பிடவில்லை. மேலும் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும்.

ஆணை நமது என்ற பிரான்:

     இப்பதிகத்தின் திருக்கடைக்காப்புச் செய்யுளில், ‘ஆணை நமதே’
என்று ஞானசம்பந்தர் குறித்துள்ளார்.

“நடுஇருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க
 வினைகெடுதல் ஆணை நமதே”

                        (தி. 2 ப. 84 பா. 11)

என்கிறார்.

     இங்கு ஒப்புமைக்காக மேலும் ஒன்றையும் சிந்திக்கலாம்.
திருமறைக்காட்டில் தங்கி இருந்த திருஞானசம்பந்தரை மங்கையர்க்கரசியார்
மதுரைக்கு அழைத்துவரச்சொன்னபொழுது, ஞானசம்பந்தர் மதுரைக்குப்
புறப்பட எண்ணுகிறார். உடன் இருந்த அப்பர் சுவாமிகள், நாளும் கோளும்
நன்றாக இல்லை; எனவே புறப்படுதல் வேண்டா என்று தடுக்கிறார்.
பிள்ளையார் “வேயுறு தோளிபங்கன்......”என்று தொடங்கும் கோளறு
திருப்பதிகத்தை அங்கு மொழிகிறார். இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பிலும்,
‘ஆணை நமதே’ என்று ஞானசம்பந்தர் அருளுகிறார்.

“ஆனசொல் மாலைஓதும் அடியார்கள் வானில்
 அரசாள்வர் ஆணை நமதே”

                       (தி.2 பா.85 ப.11)