பக்கம் எண் :

321

 7. திருவாஞ்சியம்

பதிக வரலாறு:

     காழிவேந்தர், தவமுனிவரான சொல்வேந்தரோடும் கூடச் சிவதலங்கள்
வணங்கப்போவாராய், தென்திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்து அங்கு
எழுந்தருளிய முக்கண் நீலமிடற்றரு மணியை வணங்கிப் போற்றி, வன்னி
கொன்றை எனும் இத்திருப்பதிகத்தைப்பாடி அத்திருவாஞ்சியத்து என்றும்
நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தினார்.

                    பண்: இந்தளம

ப.தொ.எண்: 143   திக எண்: 7

                   திருச்சிற்றம்பலம்

1536.







வன்னி கொன்றைமத மத்த
     மெருக்கொடு கூவிளம்
பொன்னி யன்றசடை யிற்பொலி
     வித்தபு ராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை
     செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட
     மாக வுகந்ததே.                1



     1. பொ-ரை: வன்னியிலை கொன்றைமலர் ஊமத்தம் மலர் வில்வம்
ஆகியவற்றைப் பொன்போன்ற தம் சடையில் சூடிய பழமையாளரும்,
என்னை அடிமையாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் தமது
இருப்பிடமாகக் கொண்டு விரும்பிய ஊர், வரிவண்டுகள் ‘தென்ன’ என்ற
ஒலிக் குறிப்போடு இசைபாடும் திருவாஙசியமாகும்.

     கு-ரை: வன்னி - வன்னிமரத்திலை, கொன்றைப்பூ, ஊமத்தம் மலர்,
எருக்கம்பூ. கூவிளம் - வில்வம் பொன் இயன்ற - பொன் போன்ற சடையில்
வன்னி முதலிய வற்றைப் பொலிவு பெறச் சூடிய புராணனார். புராணன்-
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம் பொருளா யுள்ளவன்.
தென்ன என்று இசை செய்வன வரிவண்டுகள். உகந்தது-விரும்பியது (வினையாலணையும் பெயர்), மேலும் இவ்வாறாதல் அறிக.