பக்கம் எண் :

330

 8. திருச்சிக்கல்

பதிக வரலாறு:

     ஞானசம்பந்தர் கடல்நாகைக்காரோணத்தை வணங்கி நீங்கிப் பரவிய
பதிகள் பல. அவற்றுள் திருச்சிக்கல், திருக்கீழ்வேளூர் முதலியனவும் ஆம்.
அவற்றைப் பணிந்து பாடிய திருப்பதிகங்களுள் ‘வானுலாவுமதி’ என்னும்
இதுவும் ஒன்று.

                    பண்: இந்தளம்

ப.தொ.எண்: 144 பதிக எண்: 8

                    திருச்சிற்றம்பலம்

1547.







வானு லாவுமதி வந்துல
     வும்மதின் மாளிகை
தேனு லாவுமலர்ச் சோலைமல்
     குந்திகழ் சிக்கலுள்
வேனல் வேளைவிழித் திட்டவெண்
     ணெய்ப்பெரு மானடி
ஞான மாகநினை வார்வினை
     யாயின நையுமே.                1


     1. பொ-ரை: வானத்தே உலாவும் மதிவந்து பொருந்தும் மதில்கள்
சூழ்ந்த மாளிகைகளும், தேன்பொருந்திய மலர்களை உடைய சோலைகளும்
நிறைந்து விளங்கும் திருச்சிக்கல் என்னும் தலத்தில், வேனிற் காலத்துக்
குரியவனாகிய மன்மதனை நெற்றி விழியால் எரித்தழித்த வெண்ணெய்ப்
பெருமான் திருவடிகளை அவனருளால் விளைந்த பதி ஞானத்தாலே
நினைபவர் வினைகள் நைந்துஅறும்.

     கு-ரை: வான் உலாவும் மதி - தன்மேல் வந்துலாவும் அளவு
உயரிய மாளிகை. ‘வண்கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்’
என்றார் கம்பர். வேனல் - சினம். வேள் - மன்மதன். விழித்திட்ட -
நெற்றிக் கண்ணைத்திறந்து எரித்த, எரித்தவன் வெண்ணெய்ப் பெருமான்
என்ற நயம் உணர்க. ஞானமாக நினைவார் - “பாசஞானத்தாலும் பசு
ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே நேசமொடும்
உள்ளத்தே நாடிப் பாதநீழற்கீழ் நீங்காதே” (சித்தியார் 292.) நினைந்து
நிற்பவர். நையும் - நைந்தொழியும்.